கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு


கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Dec 2016 7:45 PM GMT (Updated: 20 Dec 2016 1:58 PM GMT)

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவ

சென்னை,

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

விவாகரத்து

நான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றினேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். அவரை சேர்த்து வைக்கும்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் முறையிட்டேன்.

ஆனால், அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, என்னை அனுப்பி விட்டனர். என்னைப் போல பலர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஷரியத் நீதிமன்றம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாஅத்களில் குடும்ப பிரச்சினைகளை விசாரிக்கின்றனர். இவ்வாறு ஜமாஅத்களில் நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தங்களது ஷரியத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமாத்தார்கள் கூறி வருகின்றனர்.

பெண்கள் பாதிப்பு

இந்த ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகின்றன. சொத்துப் பிரச்சினைகளிலும் இவர்கள் தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமாஅத்களில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.

கருத்து வேறுபாடு

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மனுதாரர் அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் புகார் செய்துள்ளார். அந்த கவுன்சிலின் பொதுச் செயலாளர், இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக இருவருக்கும் கவுன்சிலிங்கும் நடந்துள்ளது.

மறு திருமணம்

இதன்பின்னர் மனுதாரர் முஸ்லிம் சட்டம் மற்றும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில், அவரது மனைவியிடம் ‘தலாக்’ சொல்லியுள்ளார். அவரது மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விவாகரத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் நடந்துள்ளது.

இதன்பின்னர் மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டது.

இதன்பின்னர் மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19–ந் தேதி குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனைவியிடம் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையில் இந்த இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரரை விவாகரத்து செய்த பெண், வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 27–ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஏற்க முடியாது

மேலும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் தலைமை ஹாஜிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, இரு தரப்பினரும் சம்மதத்துடன் ‘தலாக்’ சொல்லி விட்டால், அது முஸ்லிம் சட்டத்தின்படி செல்லத்தக்கது தான். இதுதொடர்பான விசாரணையில், கணவன்–மனைவி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை ஹாஜி கூறியுள்ளார். எனவே மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.  இவ்வாறு துணை கமிஷனர் கூறியிருந்தார்.

இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

துணை கமிஷனர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் நீதிமன்றத்தை போல வழிபாட்டு தலங்கள் செயல்படுவதையும் ஏற்க முடியாது.

அதிகாரிகளின் கடமை

மேலும், மசூதிக்குள் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதால், அந்த நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என்று அரசு தரப்பு வக்கீல் கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. வழிபாடு நடக்கும் இடம், அதாவது கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிப்பாட்டு தலமாக இருந்தாலும், வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஜனவரி 19–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story