வார்தா புயல் வீசிய அன்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
வார்தா புயல் வீசிய அன்று காணாமல் போன மீனவர்கள் மற்றும் அவர்கள் சென்ற படகைத் தேடும் பணி தொடர்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
வார்தா புயல் வீசிய அன்று காணாமல் போன மீனவர்கள் மற்றும் அவர்கள் சென்ற படகைத் தேடும் பணி தொடர்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
முன்னெச்சரிக்கைத் தகவல்
வார்தா புயல் வீசிய அன்று சென்னையில் காணாமல் போன விசைப்படகு மற்றும் மீனவர்களை தேடும் பணி தொடர்பாக கடலோர காவல்படையின் டி.ஐ.ஜி. வார்சி, தேசிய கடல் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:–
வார்தா புயல் வீசுவதற்கு முன்பதாக, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருந்த மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டது. ஆந்திரா அருகில் மீன்பிடித்தவர்கள் கிருஷ்ணாபட்டினம் பக்கம் கரையேறினர்.
பட்டினப்பாக்கம் அருகே
தற்போது காணாமல் போன படகில் இருந்த 10 பேரும் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பட்டினப்பாக்கம் அருகே வந்தபோது 150 கி.மீ.யில் இருந்து 190 கி.மீ. வேகத்தில் காற்று வீசியிருக்கிறது. அப்போது படகில் இருந்தவர் தனது உறவினருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். பேசிக் கொண்டிருந்தபோதே பேச்சு துண்டிக்கப்பட்டுவிட்டது.
இதை அந்த செல்போன் நெர்வொர்க் டவரை வைத்து கண்டறிந்தோம். புயல் வேகத்தை மீறி அவர்களால் கரையேற முடியவில்லை. டீசலும் முடிந்து போயிருக்க வேண்டும். இதனால் படகோடு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டிருக்கின்றனர்.
நம்பிக்கை இருந்தது
அவர்களை தேடி கடலோர காவல்படை ஒருபுறம் தேடினர். வான்வழியாக தேடும் படலமும் நடந்தது. அந்தப் பகுதியை கடந்து போகும் கப்பல்களுக்கும் தகவல் சொல்லி தேடச்சொன்னோம்.
புயல் வீசிய வேகத்தில் அவர்கள் பக்கத்து மாநிலங்கள், பக்கத்து நாடுகளுக்குக் கூட சென்றிருக்க முடியும். எனவே அங்கெல்லாம் தகவல் அனுப்பினோம். கடலில் காணாமல் போய் 150 நாட்கள் கழித்து மீனவர்கள் உயிரோடு திரும்பி (பங்களாதேசில் இருந்து) வந்த சம்பவம் எல்லாம் உள்ளது. எனவே இவர்களும் திரும்பக் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
3 சடலம் கிடைத்தன
இந்த நிலையில் அவர்கள் படகில் இருந்த வலை கிடைத்தது. பொதுவாக இதுபோன்ற கடல் கொந்தளிப்பு நேரத்தில் வலையை அறுத்து வீசுவது வழக்கம். அந்த வலையை வைத்து அது ஜெயராமன் என்பவரின் படகு என்பதை அறிந்துகொண்டோம்.
அப்படி வலையை அறுத்து வீசிவிட்டு வேறு எங்காவது சென்றிருப்பார்களா என்று தேடினோம். அந்த நேரத்தில்தான் நாகை அருகே கோட்டமேடு அருகே கடலில் 40 கி.மீ. தூரத்தில் 3 பேரின் சடலம் கிடைத்தது. எனவே, கடலுக்குள் படகு மூழ்கியிருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
தேடும் பணி
அதனடிப்படையில் படகைத் தேடுகிறோம். புயல் வீசும்போது அவர்கள் என்ஜின் இருக்கும் கீழ் அறைக்குச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறோம். படகைத் தேடும் பணிகள் தொடரும். அதுகுறித்து தகவல் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story