ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை முயற்சி கடிதம் சிக்கியது


ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை முயற்சி கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 1 Jan 2017 3:45 AM IST (Updated: 1 Jan 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அ.தி.மு.க. தொண்டர் ‘எலி மருந்து’ சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

சென்னை, 

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அ.தி.மு.க. தொண்டர் ‘எலி மருந்து’ சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

அ.தி.மு.க. தொண்டர் 

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் சிவாஜி ஆனந்த் (வயது 42). இவர் தீவிர அ.தி.மு.க தொண்டராவார்.

நேற்று காலை 11 மணியளவில் ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஆனந்த் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதன்பின்பு சமாதியின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென கூச்சலிட்டபடி கையில் வைத்திருந்த ‘எலி மருந்தை’ சாப்பிட்டார். இதை பார்த்த சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஓடிவந்து ஆனந்த் சாப்பிட்ட எலி மருந்தை துப்பும் படி கூறினார்கள்.

தீவிர சிகிச்சை 

ஆனால், அவர் மறுபடியும் கூச்சலிட்டப்படி நான் துப்ப மாட்டேன் என்று கூறி எலி மருந்தை முழுங்கினார். உடனே அருகில் இருந்த போலீசார் ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் வரும் முன்னே ஆனந்த் மயக்கம் அடைந்து விட்டார். அதன்பிறகு, போலீசார் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது... 

அங்கு ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆனந்த் எலி மருந்து சாப்பிட்ட இடத்தில் ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் ஆனந்த் ‘தாய் இருந்த இடத்தில், சித்தியா.. இது இந்த நாட்டுக்கு தேவையா... அம்மா இறந்த மர்மம் தெரியாமல் இன்று(நேற்று) 31.12.16 பதவி ஏற்பதால், என் உயிரை தந்து காப்பேன்... அம்மாவால் நான், அம்மாவுக்காகவே நான்... இவன் கே.சிவாஜி அனந்த்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. தொண்டர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story