வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுநிலைகள் வலுவடையாததால் மழை பெய்வது இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுநிலைகள் வலுவடையாததால் மழை பெய்வது இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சமாக வடகிழக்கு பருவமழை கவனிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் போதுமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதிகம் வலுப்பெறாத காரணத்தால் மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி அமையவில்லை.
இதற்கிடையில் ‘நாடா’ மற்றும் ‘வார்தா’ புயல் காரணமாக தமிழக கடல் பகுதியிலுள்ள ஈரப்பதமும், காற்றின் அழுத்தமும் காணாமல் போனது. குறிப்பாக ‘வார்தா’ புயல் தமிழகத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வங்கக்கடலில் எழுந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெறவே இல்லை.
38 சதவீத மழை
இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து விட்டதாக கருதப்படுகிறது. வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 38 சதவீத மழையே பதிவாகி உள்ளது. பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்றுடன் வடகிழக்கு பருவமழை முடிந்துவிடும் என்று கருதப்பட்டது.
ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவடையவில்லை என்றும், இன்னும் 10 நாட்கள் வடகிழக்கு பருவமழை காலம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–
10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருமழை எப்போதுமே மழைப்பொழிவுடன் மட்டும் முடிவடைந்தது கிடையாது. சில வருடங்களில் வறண்ட வானிலையுடன் வறட்சியிலும் வடகிழக்கு பருவமழை விடைபெற்று உள்ளது. வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வு நிலை, கடலில் அழுத்தம் ஆகியவற்றை கணித்த பிறகே வடகிழக்கு பருவமழை முடியும் காலம் கணிக்கப்படும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி 4–ந்தேதியுடன் முடிந்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி அமையவில்லை. மழை அளவும் குறைந்திருக்கிறது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கிறது. அது மேற்கு நோக்கி நகர்வதால் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
எனவே தற்போதுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் முடியவில்லை. எடுக்கப்பட்ட கணிப்புகள் மற்றும் ஆய்வின்படி, வடகிழக்கு பருவமழை இன்னும் 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இதுதொடர்பான இறுதி ஆய்வு முடிவு வெளியிடப்படும்.
ஒரு சில இடங்களில்...
அதைத்தவிர இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை 2 நாட்கள் அதே இடத்தில் நீடித்தது. இந்தநிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுநிலை அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலைகொண்டு உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களின் லேசான மழை பெய்யும். வடதமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு கிடையாது. சென்னையை பொறுத்தவரையில் வானம் வறண்ட நிலையிலேயே காணப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Next Story