உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு


உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலம் 6 மாதம் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2017 5:30 AM IST (Updated: 1 Jan 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாத நிலையில், நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாத நிலையில், நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அறிவிப்பாணை ரத்து


தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் கவுன்சிலர்கள் அல்லது வார்டு உறுப்பினர்களின் பதவிக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், எஸ்.டி. பிரிவினருக்கு தகுந்த இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அவசர கதியிலும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்கிறேன். மேலும் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். அதற்காக புதிய தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவி காலம் அக்டோபர் 24-ந் தேதியுடன் முடிவடைவதால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி உத்தரவிட்டார்.

தனி அதிகாரிகள் நியமனம்


இதையடுத்து தனி அதிகாரிகளை நியமிப்பதற்காக அவசரச் சட்டங்களை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி பிறப்பித்தார். இதன்படி, ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கடந்த அக்டோபர் 24-ந் தேதி அரசாணை வெளியிட்டார்.

அதில், மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் தேர்தல் முடிந்து, முதல் கவுன்சில் கூட்டம் நடக்கும் வரையிலோ அல்லது டிசம்பர் 31-ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை இந்த அமைப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகிப்பார்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவின்படி தனி அதிகாரிகளின் பதவி ஏற்று, பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த தனி அதிகாரிகளின் பதவி காலம் கடந்த சனிக்கிழமையுடன் (டிசம்பர் 31-ந் தேதி) முடிந்து விட்டது.

பதவி காலம் நீட்டிப்பு


அதேநேரம், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவில்லை. தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்து, அந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறது.

அதனால், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அதிகாரிகளின் பதவி காலம் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டி நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர் கடந்த 31-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அமலுக்கு வந்தது


தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், பிரிவு 261-ஏ வழங்கியுள்ள அதிகாரத்தின் கீழ் தமிழக கவர்னர், தமிழ்நாடு ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமித்து கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி உத்தரவிடப்பட்டது. இவர்களது பதவி காலம் டிசம்பர் 31-ந் தேதி வரை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதவி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது வருகிற ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே கடந்த அக்டோபர் 24-ந் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ள, ‘டிசம்பர் 31-ந் தேதி’ என்ற வரியை ‘ஜூன் 30-ந் தேதி வரை’ என்று திருத்தப்படு கிறது. இந்த புதிய அரசாணை ஜனவரி 1-ந் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது

Next Story