மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணனை நியமித்த உத்தரவு 7 நாட்களுக்குள் திரும்பப்பெறப்படும்; ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்


மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக கல்யாணி மதிவாணனை நியமித்த உத்தரவு 7 நாட்களுக்குள் திரும்பப்பெறப்படும்; ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்
x
தினத்தந்தி 3 Jan 2017 1:27 AM IST (Updated: 3 Jan 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை நியமித்த உத்தரவை 7 நாட்களுக்குள் திரும்பப்பெறப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. தலைவர் நியமனம் சென்னை ஐகோர்ட்டில், பாடம

சென்னை,

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை நியமித்த உத்தரவை 7 நாட்களுக்குள் திரும்பப்பெறப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

தலைவர் நியமனம்

சென்னை ஐகோர்ட்டில், பாடம் நாராயணன் என்பவர், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக இருப்பது ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, இந்த பதவியை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை, தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

மறுஆய்வு செய்ய வேண்டும்

இதையடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவியை முறையான விளம்பரம் செய்து, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற்று பரிசீலிக்கவில்லை என்று மனுதாரர் ஐகோர்ட்டில் முறையிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு, கல்யாணி மதிவாணன் முறையான சட்டவிதிகளை பின்பற்றி நியமிக்கப்படவில்லை. எனவே, இவரது நியமனத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

திரும்ப பெறப்படும்

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ‘தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணனை நியமித்ததை தமிழக அரசு மறுஆய்வு செய்து வருகிறது. இவரை தலைவராக நியமித்து ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை 7 நாட்களுக்குள் தமிழக அரசு திரும்பப் பெற்றுவிடும். பின்னர், தலைவர் பதவிக்கு முறையான விளம்பரங்களை செய்து, தகுந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, பரிசீலிக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

அரசின் முடிவுக்கு பாராட்டு

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தலைவர் நியமனத்தை திரும்ப பெறப்போவதாக அட்வகேட் ஜெனரல் கூறியதை நாங்கள் பதிவு செய்துக் கொள்கிறோம். தமிழக அரசின் இந்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். அதேநேரம், புதிதாக தலைவர் பதவிக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்யும்போது, இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள விதிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்று மனுதாரர் வாதிட்டார்.

மேலும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுந்த நபர்களை தேர்வு செய்வது குறித்து கடந்த 2014–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதையும் தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

கமிட்டி செயல்படவில்லை

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கவில்லை. இதனால், மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியும், சிறார் நீதி குழுமம் ஆகியவை செயல்படாமல் உள்ளது. இதுகுறித்து கேட்டபோது, இந்த புதிய விதிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்துள்ளார். இதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 10–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


Next Story