மணல் குவாரியில் ‘ஸ்வைப்’ எந்திரங்களை பயன்படுத்துவதில் என்ன சிரமம்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


மணல் குவாரியில் ‘ஸ்வைப்’ எந்திரங்களை பயன்படுத்துவதில் என்ன சிரமம்? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 Jan 2017 7:30 PM GMT (Updated: 11 Jan 2017 6:40 PM GMT)

மணல் குவாரியில் ‘ஸ்வைப்’ எந்திரங்களை பயன்படுத்துவதில் என்ன சிரமம்? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த 2003–ம் ஆண்டு முதல் மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. இதுவரை வரைவோலை (டி.டி.) பெற்று மணல் விற்பனை செய்யப்பட்டன. தற்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், ரொக்கப்பணம் கொடுத்து மணல் வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மணல் குவாரிகளில், வரைவோலையுடன், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்காக தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் ‘ஸ்வைப் மிஷின்களை’ பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜீவ் சக்தேர், ‘மணல் குவாரியில் ‘ஸ்வைப் மிஷின்களை’ பயன்படுத்த அரசுக்கு என்ன சிரமம் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Next Story