நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jan 2017 7:47 PM GMT (Updated: 11 Jan 2017 7:47 PM GMT)

புதுகும்மிடிப்பூண்டியில் நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 பேர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நோயின் பாதிப்பால் கடந்த இரு நாட்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழப்பது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதுகும்மிடிப்பூண்டி அருகிலுள்ள காவேரிராஜபுரம் பகுதியில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 குழந்தைகள் உயிரிழந்தனர். அதன்பின் காஞ்சீபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்தனர். மர்மக் காய்ச்சலுக்கு முக்கிய காரணம் சுகாதாரக் குறைபாடுகள் தான்.

புதுகும்மிடிப்பூண்டியில் இருளர் எனப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 16 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுவர் இல்லாத ஓலைக்குடிசைகளில் வாழும் அவர்களுக்கு கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அவர்களுக்கு இல்லை. இந்த அவலங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது நோய் பரவலும், உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story