ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வீதிக்கு வந்து போராட்டம்


ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும்  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து  வீதிக்கு வந்து போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 7:09 AM GMT (Updated: 18 Jan 2017 7:09 AM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை வண்ணாரப் பேட்டை தியாகராயர் கலைக் கல்லூரி மாணவர்கள் 200 பேர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரீனா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் 2000 பேர் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து மெரீனா கடற்கரைக்கு புறப்பட்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஊர்வலமாக சென்றனர். திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பரங்கிமலை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறி யலை கைவிடச் செய்தனர்.

மதுரையில் இருந்த போது ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளேன். உங்கள் போராட்டத்தை மதிக்கிறேன் -மயிலாப்பூர் டி.சி மாணவர்களிடம் பேச்சு.

போராட்டத்திற்கு நல்ல தீர்வு கிடைக்க காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் - துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மாணவர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.

வேலூர் கோட்டை முன்பு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.மேல்விஷாரம் அப்துல் ஹக்கிம் கல்லூரி, குளோபல் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் திருவண்ணாமலை காமராஜர்சிலை அருகே இளைஞர்கள், மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி கோட்டை மைதானத்தில் மாணவர்கள் இளை ஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏ.சி.எஸ். கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வகுப்பு களை புறக்கணித்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி உள்பட பல கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து வலுத்து  வருகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில்     ஈடுபட்டு வருகிறார்கள்.இன்று சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி பொறியியல் கல்லூரி, டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியே வந்தனர்.தொடர்ந்து அவர்கள் ஊர்வ லமாக  சென்று  கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டத்திலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லையில் உள்ள பாளை வ.உ.சி. மைதானத் தில் நேற்று மாலை மாண வர்கள், இளைஞர்கள், ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நள்ளிரவு வரை இந்த பேராட்டம் தொடர்ந்தது. அதன் பிறகும் சுமார் 100 இளைஞர்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இன்று 2-வது நாளாக நெல்லையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள்  ஸ்டிரைக் செய்து வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கல்லூரி மாண வர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக போராட்டம் நடத்தப்பட்டது.நாகர்கோவிலில் இன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதிலும் திரளான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுவையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து ஊர்வலமாக அந்தந்த கல்லூரி பேனர்களுடன் ரோடியர்மில் திடலுக்கு வந்தனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சேதராப்பட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்ஜினீயரிங் மற்றும் பல கலைkல்லூரிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்கள் இன்று காலை யில் சேதராப்பட்டில் திரண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அங் கிருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

Next Story