ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின


ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின
x
தினத்தந்தி 4 Feb 2017 7:46 PM GMT (Updated: 4 Feb 2017 7:46 PM GMT)

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் சிக்கின.

கும்மிடிப்பூண்டி,

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் சோதனை

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னை நோக்கி தனியார் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை முதல் தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் சோதனைச்சாவடி அருகே மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் தலைமையில், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுடலைமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் அமர்ந்து இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

பின்னர் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் தங்க கட்டிகள் இருப்பதும், அதை கடத்தி வந்தவர்கள் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த காஜாநஜீமுதீன் (வயது 42), சகாபுதீன் (38), ஜமாலுதீன் (30), முகமது இக்பால் (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள இந்த தங்க கட்டிகளின் எடை 3 கிலோ 360 கிராம் ஆகும். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வந்து விசாரணை நடத்தினார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் மீது மியான்மர் நாட்டின் முத்திரை இருப்பதால், சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story