எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருப்பது சகலவசதிகளும் கொண்ட சொகுசு விடுதி
சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கும் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருப்பது சகலவசதிகளும் கொண்ட சொகுசு விடுதி
சசிகலா முதல்–அமைச்சராக பதவி ஏற்பது குறித்து கவர்னர் முடிவு எடுக்கும் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, நேற்று முன்தினம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் நடந்து முடிந்ததும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த பஸ்கள் நள்ளிரவு வரை சென்னைக்குள்ளேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கல்பாக்கத்துக்கு அருகே கிழக்கு கடற்கரை சாலையில், கூவத்தூரில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த சொகுசு விடுதி ஒரு தீவுக்குள் இருக்கும் உணர்வை கொடுக்கும் வகையில் நீர்நிலைகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பான விருந்து வசதிகள், மசாஜ் நிலையம், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் என சகலவித சிறப்பம்சங்களும் கொண்டது இந்த சொகுசு விடுதி.
இங்கு தரத்தின் அடிப்படையில் 3 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதன்படி அறைகளின் கட்டணம் ரூ.5,500 முதல் ரூ.9,900 வரை உள்ளது.
தற்போது இந்த சொகுசுவிடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தவிர வேறு யாரும் கிடையாது. அனைத்து அறைகளையும் அவர்களே ஆக்கிரமித்து உள்ளனர். இது போக கல்பாக்கத்தில், பூந்தண்டலம் பகுதியில் உள்ள மற்றொரு சொகுசு விடுதியிலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
எம்.எல்.ஏ.க்களை யாரும் செல்போனில் தொடர்பு கொள்ளாமல் இருக்க 2 சொகுசு விடுதிகளிலும் செல்போன் கட்டுப்பாட்டு கருவி (ஜாமர்) வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த சொகுசு விடுதி அமைந்திருக்கும் கூவத்தூர், கிராம பகுதியாகும். சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியில் பொதுமக்கள் சகஜமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
சொகுசு விடுதிக்கு செல்லக்கூடிய சாலை மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சாலையாகும். அந்த சாலையில் ஒவ்வொரு 10 அடிக்கும் சிலர் நின்றுகொண்டு மக்களை அங்கு வரவிடாமல் மிரட்டி அனுப்பினர். பத்திரிகையாளர்களையும் உள்ளே நுழையவிடவில்லை.
Next Story