அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்


அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 17 Feb 2017 3:54 PM GMT (Updated: 17 Feb 2017 3:54 PM GMT)

எம்.எல்.ஏக்கள் எந்த ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாளை தமிழக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில்  அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தர். ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:- “

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம். ஜெயலலிதாவின் கொள்கையை கட்டிக் காத்திட வேண்டும். மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்காத்தான். 

எம்.எல்.ஏக்கள் முடிவு எடுப்பதற்கு முன் ஜெயலலிதாவை நினைத்து பார்க்க வேண்டும். குடும்ப ஆட்சியை எதிர்த்து வெற்றி பெற்றவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் குடும்ப ஆட்சி அமைய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உறுதுணையாக இருக்கலாமா?  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் முன்பு எம்.எல்.ஏக்கள்  சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும். 

எம்.எல்.ஏ நட்ராஜ் எடுத்த நல்ல முடிவு வரவேற்கத்தக்கது. அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும். எம்எல்ஏக்கள் எந்த ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டார்கள் என நம்புகிறேன். பொதுமக்கள், தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குத் தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம்  எங்களது அறப்போராட்டம் 100% மகத்தான வெற்றி பெறும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story