சென்னையில் வெளிநாட்டு குளிர்பானங்களை அழிக்கும் போராட்டம்
சென்னையில் வெளிநாட்டு குளிர்பானங்களை அழிக்கும் போராட்டம் வெள்ளையன் தலைமையில் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வெள்ளையன் உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.
சென்னை,
ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் திரண்ட இளைஞர்கள், மாணவர்களின் கூட்டம் வெளிநாட்டு குளிர்பானங்களின் தயாரிப்பையும் தமிழகத்தில் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. போராட்டத்தில் பேசிய இளைஞர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள், வணிகர் அமைப்பு நிர்வாகிகள், வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க கூடாது, அதனை தமிழர்கள் வாங்கி பருகக்கூடாது. அதற்கு பதிலாக தமிழகத்தில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களை வாங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அன்று எழுந்த ஒட்டுமொத்த குரலின் தாக்கம் தமிழகம் முழுவதும் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் எதிரொலித்தது.
கடந்த ஒரு மாதமாக விற்பனைக்கு இருந்த வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் வாங்காமல் புறக்கணித்ததால் கடும் சரிவை வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களை முழுமையாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
போராட்டம்ஜனவரி மாதம் 26–ந் தேதி முதல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையிலான வணிகர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார்கள். நேற்று முதல் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்க கூடாது என்று சில சங்கங்கள் அறிவித்து இருந்தன.
இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் நிர்வாகிகள் பெரம்பூர் பஸ்நிலையம் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கிருந்த வெளிநாட்டு குளிர்பானங்களை தூக்கிவந்து ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்களை கொண்டு வந்து அவர்கள் தரையில் கொட்டி வெளிநாட்டு குளிர்பானங்களை விற்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வெள்ளையன் கூறும்போது, வெளிநாட்டு குளிர்பானங்கள் 75 சதவீத கடைகளில் விற்பனை செய்வது இல்லை. எஞ்சிய ஒரு சில கடைகளில் வைத்திருந்த குளிர்பானங்களை அழிக்கும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம் என்றார். இதனை தொடர்ந்து அண்ணாநகர் எல் பிளாக் பகுதியில் உள்ள கடைகளில் இருந்த வெளிநாட்டு குளிர்பானங்களை வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கீழே ஊற்றி, அழித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வெள்ளையன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்து, அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விக்கிரமராஜாசென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தொகுதி கூட்டம் நடைபெற்றது. இதில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு மே 5–ந் தேதி நடைபெறும் வணிகர் சங்க மாநில மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் விக்கிரமராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் இதுவரை ரூ.8 கோடி மதிப்பிலான விற்பனை செய்யப்படாத குளிர்பானங்கள் உள்ளது. அதனை திரும்பப்பெற சம்பந்தப்பட்ட குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் மறுத்து வருகிறது. அதனை திரும்பப்பெறும் வரை தொடர்ந்து வணிகர் சங்க பேரமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும்.
பெரிய மால்கள், பார்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை மக்கள் வாங்கி குடிக்காமல் இருந்தாலே போதும்.
சென்னை மாநகராட்சியில் கட்டிட உரிமையாளர்கள் வரி செலுத்தவில்லை என்றால் வியாபாரிகளின் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து மனு அளிக்கப்படும். அதிகாரிகள் ஏற்க மறுத்தால் மாநகராட்சியை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.