கட்சி விவகாரத்தில் தலையிட கோர்ட், தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்


கட்சி விவகாரத்தில் தலையிட கோர்ட், தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்
x
தினத்தந்தி 2 March 2017 12:27 PM IST (Updated: 2 March 2017 12:26 PM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் கட்சித்தலைவராக நீடிக்கலாம் என்றும் கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் நவநீதகிருஷ்ணன் எம்.பி கூறியுள்ளார்.

சென்னை

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன. புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக, மைத்ரேயன் எம்.பி. தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், ‘அ.தி.மு.க.வின் கட்சி விதிமுறைகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது. எனவே, சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை செல்லாது என்று அறிவிப்பதுடன் அவர் செய்த புதிய நியமனங்கள், நிர்வாகிகள் நீக்கம் ஆகியவற்றையும் ரத்துசெய்ய வேண்டும். மேலும் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டதையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன், இது தொடர்பாக பிப்ரவரி 28-ந்தேதிக்குள் (நேற்று) விளக்கம் அளிக்குமாறு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்பியது.

அதன்படி சசிகலா சார்பில் அவருடைய வக்கீல்கள் செந்தில், பாண்டியன், ராகேஷ் சர்மா ஆகியோர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் பதில் கடிதத்தை அளித்தனர்.

குற்றவாளியாக தண்டனை பெற்றவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்படவேண்டும் என்ற விதி இருப்பதால், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க முடியாது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஆதரவு ராஜ்யசபா எம்.பி நவநீதகிருஷ்ணன், தண்டனை பெற்றவர் கட்சித்தலைவராக நீடிக்கலாம் என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் லாலு பிரசாத் கூட தலைவராக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் ஆணைய கேள்விகளுக்குப் பதில் கொடுத்து விட்டோம் என்றும், கட்சி உள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் தனது கருத்தைக் கூற உரிமை உண்டு என்று கூறிய அவர், ஓ.பன்னீர் செல்வம் நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ளார். அவரை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் நவநீதகிருஷ்ணன் எம்.பி கூறியுள்ளார்.


Next Story