ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை:எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை ஓ.பன்னீர்செல்வம்


ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை:எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 4 March 2017 5:30 AM IST (Updated: 4 March 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, 

அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனைகளை கேட்டறிந்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று காலையில் காஞ்சீபுரம் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளிடமும், மாலையில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளிடமும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.

ஆலோசனை

இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, கே.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது, உள்ளாட்சி தேர்தலின்போது ஓ.பன்னீர்செல்வம் மேற்கொள்ள இருக்கும் நீதி கேட்கும் பயணம் மற்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள உண்ணாவிரத போராட்டத்தின்போது செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மர்மத்தை விலக்கும் பொறுப்பு

இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து இந்த இயக்கத்தை காப்பாற்றுவார் என்று நினைத்தோம். இயக்கத்துக்காக தன்னையே தந்து மறைந்துவிட்டார். இதனால் தற்போது நாம் தனித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மத்தியில் மர்மமாக பதிந்துள்ளது. அதில் உள்ள மர்மத்தை விலக்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த தர்மயுத்தத்தில் 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள உண்ணாவிரதம் நிறைவடையும்போது மத்திய அரசு விசாரணைக்கு உட்பட்டு, நீதி விசாரணை நடத்தப்படும் என்ற உத்தரவு வரும். மாறுபட்ட உத்தரவு வருமானால் தமிழக மக்கள் அனைவரும் போராட்டம் நடத்துவார்கள். ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதாக கூறப்படும் 75 நாட்களும் நான் அவரை பார்க்கவில்லை.

ஜல்லிக்கட்டு விவகாரம்

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்கவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்கள். ஜெயலலிதாவை காப்பாற்ற முடியவில்லை என்ற மனகஷ்டத்தில் வேண்டாம் என்றேன். வேறு ஒருவரை நியமித்தால் பிரச்சினை வரும் என்றார்கள், அதனால் நான் சரி என்றேன்.

முதல்-அமைச்சராகி 3-வது நாளிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் சசிகலா முதல்-அமைச்சராக வரவேண்டும் என்றார். நான் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன். என்னை அவமானப்படுத்தி ராஜினாமாவும் செய்யவைத்தார்கள். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நான் டெல்லி சென்ற பின்னர் தான், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அ.தி.மு.க. எம்.பி.க் களை அழைத்துக் கொண்டு பிரதமரை சந்திக்க வருவதாக எனக்கு தெரியும்.

வெளிநாட்டு சிகிச்சை

அவருக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே நான் சந்திக் கும்போது தம்பிதுரை உடன் வரலாமா? என பிரதமர் அலுவலகத்தில் கேட்டேன். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. அ.தி.மு.க. எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை யாவது என்னிடம் கொடுங் கள். உங்கள் சார்பில் பிரதமரிடம் நான் கொடுக்கிறேன் என்றேன். ஆனால் அதற்கு தம்பிதுரை மறுத்துவிட்டார்.

கடைசி வரை பிரதமரை அவரால் சந்திக்கவே முடியவில்லை. 35 வருடம் டெல்லியில் இருந்தபோதும் ஜனாதிபதி, பிரதமரை எப்படி சந்திப்பது என்ற நடைமுறைகூட தெரியாத ஒரு எம்.பி.யாகத்தான் தம்பிதுரை இருந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு என்ன தீராத வியாதியா இருந்தது. அவருக்கு 75 நாட்கள் என்ன சிகிச்சை கொடுத்தார்கள்? பயணம் செய்யும் வகையில் அவருடைய உடல்நிலை ஒத்துழைப்பு கொடுக்குமானால் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்வோம் என்று நான் உள்பட பலரும் மன்றாடினோம். ஆனால் எங்களுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.

போராட்டம் தொடரும்

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்குவதுதான் தர்மயுத்தத்தின் நோக்கம். ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து டாக்டர்களை தொடர்புகொண்டு நான் கேட்டறிந்தேன். அவர்கள் கூறியது என் மனதை காயப்படுத்தியது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகும் வரை தர்மயுத்தம் தொடரும்.

எனவே மத்திய அரசின் மூலமாக உரிய நீதி விசாரணை வேண்டும். 8-ந் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் முடிவதற்குள் நல்ல முடிவு வரவேண்டும். இல்லையேல் போராட்டம் வேறுவிதமாக தொடரும். சந்தர்ப்பவாதத்தை பயன்படுத்தி பொதுச்செயலாளர், அடுத்து முதல்-அமைச்சராக சசிகலா முயற்சித்தார். அவருக்கு பதவி சுகம் தேவைதானா? என்று மக்கள் கேட்கிறார்கள். ஒரு குடும்பத்தின் கையில் கட்சி செல்லாமல் இருப்பதுதான் ஜெயலலிதா ஆன்மாவுக்கு நாம் செய்யும் புண்ணியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story