பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை: தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரம் நடந்தது


பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை: தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரம் நடந்தது
x
தினத்தந்தி 4 March 2017 5:00 AM IST (Updated: 4 March 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

சென்னை, 

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 23-ந்தேதி தொடங்கியது. அன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து அவரது உரை மீது விவாதம் நடத்தப்பட்டது.

பின்னர் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டசபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

2 மணிநேரம்

இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாத மத்தியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நேற்று மாலை 4.40 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் தொடங்கியது. மாலை 6.40 வரை இரண்டு மணி நேரம் இந்த கூட்டம் நீடித்தது.

விவாதத்துக்கு வந்தவை

தமிழக பட்ஜெட், புதிய திட்டங்கள், அரசுத் துறைகளுக்கான ஒதுக்கீடுகள், தாக்கல் செய்யப்பட வேண்டிய சட்டமசோதாக்கள், அரசு சார்பில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கவேண்டிய பதில்கள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்டுள்ள முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story