பல்வேறு பிரச்சினைகள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின்


பல்வேறு பிரச்சினைகள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 March 2017 2:00 AM IST (Updated: 4 March 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு பிரச்சினைகள் தமிழகத்தை சூழ்ந்து உள்ளன என்றும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெடுவாசல்

நெடுவாசலில் ஏறக்குறைய 16 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் உடனடியாக மத்திய அரசும், மாநில அரசும் தலையிட்டு ஒரு தீர்வு காண வேண்டும். இந்தப் போராட்டம் தொடங்கிய நேரத்திலேயே, அப்போது டெல்லியில் இருந்த நான், உடனே மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியதுடன், அவரை நேரடியாகவும் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், அவரை சந்திக்க இயலாத காரணத்தால் இரு நாட்களுக்கு முன்பாக தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் நேரடியாக சென்று அவரை சந்தித்து எனது கடிதத்தை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்கள்.

மாநில அரசு நிச்சயமாக திட்டம் நிறைவேற அனுமதிக்காது, என்ற உறுதிமொழியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போராட்டக்குழுவினரிடம் தெரிவித்து இருக்கிறார். முதல்-அமைச்சர் அப்படி தெரிவித்து இருந்தாலும், மத்தியில் இருக்கக்கூடியவர்களும், மத்திய மந்திரிகளும் இதனை புரிந்து கொண்டு, இந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம், என்ற உறுதிமொழியை தர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து உற்சாகப்படுத்தவும், போராட்டத்திற்கு எங்கள் ஆதரவையும் தரக்கூடிய வகையில் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட இருக்கிறேன்.

அனைத்து கட்சி கூட்டம்

தாமிரபரணி நதி நீர் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக தமிழக நிர்வாகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது. நீட் தேர்வு பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பிரச்சினை, வார்தா புயல் நிவாரண நிதி மாநில அரசுக்கு வழங்கப்படாத பிரச்சினை உள்பட இதுபோன்ற பல பிரச்சினைகள் தமிழகத்தை சூழ்ந்து கொண்டுள்ளன. எனவே, அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக இந்த அரசு கூட்ட வேண்டும்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போதும் இந்தப்பிரச்சினைகளை எல்லாம் சுட்டிக்காட்டி தொடர்ந்து நான் பலமுறை எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இதற்கு முன்பு முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்து சொன்னேன். இன்றைக்கு பினாமி அரசாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறக்கூடிய அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்சினைகள் பற்றி விவாதித்து தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story