தஞ்சை ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர்
தஞ்சையில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் தடை நீங்கிய நிலையில், பரவலாக பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை பூக்கொல்லையில் பொதுமக்கள் சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத்தொடங்கினர். மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை கலெக்டர் அண்ணாதுரை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
வாடி வாசலில் இருந்து காளைகள் வரிசையாக திறந்து விடப்பட்டன. வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கினர். கரவொலி எழுப்பி பார்வையாளர்கள், அவர்களை ஊக்குவித்தனர்.
முட்டிய காளைகள்
சில காளைகள், மாடுபிடி வீரர்களால் நெருங்க முடியாத அளவுக்கு முரட்டுக்காளைகளாக இருந்தன. அவை தம்மை நெருங்க வந்த மாடுபிடி வீரர்களை தூக்கி பந்தாடின. சில காளைகள் முட்டி தள்ளின.
அடங்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
இதில் 146 காளைகள் பங்கேற்றன. 157 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
காளைகளை அடக்கியதில் 5 வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் காளைமாட்டின் உரிமையாளர் ஒருவரும் படுகாயம் அடைந்தார்.
தஞ்சையில் ஜல்லிக்கட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Next Story