தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க தெளிவான கொள்கைகளை வரையறுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்கும் விஷயத்தில் அனுமதி அளிக்க தெளிவான கொள்கைகளை தமிழக அரசு வரையறுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொறுப்பு
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் செயல்பட்டு வரும் பெப்சி, கோக் நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்பு ஆலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையையும் நீதிபதிகள் ரத்து செய்திருக்கின்றனர். இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோககோலா ஆலை அமைக்கப்படுவதற்கும், அந்த ஆலை ஆற்று நீரை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்திய போது, அதை மதித்து அந்த ஆலையை மூட ஆணையிட்ட தமிழக அரசு, இந்த விஷயத்தில் மட்டும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
கொள்கை
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவும் சூழலில் பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு தண்ணீரை தாரை வார்ப்பது ஏற்க முடியாததாகும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஆலைகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். பெப்சி, கோக் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இதுகுறித்து தெளிவான கொள்கைகளை வரையறுத்து அதனடிப்படையில் மட்டுமே தொழிற்சாலைகளுக்கான தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Next Story