சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் ரூ.1,487 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் ரூ.1,487 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், முடிவடைந்த திட்டப்பணிகளின் தொடக்க விழாவும் நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.திட்டங்களை தொடங்கி வைத்து முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:–
தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லும் முனைப்போடு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பதவியேற்ற முதல் நாளிலேயே 5 சிறப்பு திட்டங்களுக்கான கோப்புகளில் நான் கையெழுத்திட்டேன்.
உழைக்கும் மகளிருக்கு வாகனம்ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் சுமார் ரூ.200 கோடி செலவில், அம்மா இருசக்கர வாகன திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். ஆண்டொன்றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயனடையும் வகையில், ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 5 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் மூடல்பூரண மதுவிலக்கு என்ற நிலை உருவாக்கப்படும் என்ற அடிப்படையில் ஏற்கனவே ஜெயலலிதாவால் 500 மதுபான கடைகள் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து, மேலும் 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 247 கோடி பயிர் இழப்பு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்களை திறம்பட மேலாண்மை செய்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியினை எதிர்கொள்ள பழமையான குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளித்து நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடியில் செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் இடைக்கால நிவாரணம், ரூ.15 கோடி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
7,506 திட்டப்பணிகள்மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்களை, தமிழக அரசு பணியாளர்களுக்கும் மாற்றியமைக்க தேவையான பரிந்துரைகளை அளித்திட அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில், ரூ.1,375 கோடியே 95 லட்சத்தில் நிறைவு செய்யப்பட்ட 7,506 திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதிலும், ரூ.111 கோடியே 3 லட்சத்தில் 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னை மாவட்டத்தில் அயோத்தியா குப்பத்தில் ரூ.81 கோடியே 48 லட்சத்தில் ஆயிரத்து 128 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்பட மொத்தம் ரூ.577 கோடியே 34 லட்சத்தில் ஆயிரத்து 583 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சீபுரம்கடலூர் மாவட்டத்தில், ரூ.6 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்கு தளங்கள், ரூ.7 கோடியே 16 லட்சம் மதிப்பில் 110 கிலோவாட் துணை மின்நிலையம் உள்பட ரூ.53 கோடியே 4 லட்சத்தில் 208 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டத்தில், இருங்காட்டுக்கோட்டை மற்றும் வல்லம், வடகல் பகுதியில் சரக்கு வாகன முனையம் ரூ.21 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டிலும், ரூ.57 கோடியே 14 லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள வண்டலூர்–கூடுவாஞ்சேரிக்கு இடையில் ரெயில்வே மேம்பாலம் உள்பட 3 பாலங்கள் என மொத்தம் ரூ.205 கோடியே 42 லட்சத்தில் 96 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர்திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.45 கோடியே 53 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையங்கள் இதர கட்டிடங்கள் என மொத்தம் ரூ.192 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 112 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ.71 கோடியே 44 லட்சத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலமாக கூடப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்து 24 குடியிருப்புகள் உள்பட மொத்தம் ரூ.285 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் ஆயிரத்து 731 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வேலூர்வேலூர் மாவட்டத்தில், இச்சிபுதூர் கிராமத்தில் ரூ.12 கோடியே 75 லட்சத்தில் துணை மின்நிலையம், காவல் துறை வீட்டுவசதி வாரியம் மூலமாக ரூ.23 கோடியே 81 லட்சத்தில் 164 குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள் உள்பட ரூ.92 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 307 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், காவல் துறை வீட்டுவசதி வாரியம் மூலமாக ரூ.29 கோடியே 77 லட்சத்தில் 92 குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள் உள்பட ரூ.81 கோடியே 46 லட்சத்தில் 471 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆக, ரூ.1,487 கோடி செலவில் நிறைவு பெற்ற பணிகளையும், புதிய திட்ட பணிகளையும் தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
110 விதியின் கீழ்...தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா 110 விதியின்படி அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை என்று எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இங்கே தொடங்கி வைக்கிற திட்டங்களில் பெரும்பாலானவை 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்டவை.
தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட, அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகத்தை அழைத்துச்சென்ற ஜெயலலிதாவுக்கு வழங்கிய ஒத்துழைப்பை போலவே, இந்த அரசுக்கும் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.