அ.தி.மு.க. அழிந்து விட்டது என்று சொல்வதா? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்
அ.தி.மு.க. அழிந்து விட்டது என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொருளாளரும், அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஒப்பற்ற இயக்கம்மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. அழிந்துவிட்டதாகவும்; அவருடைய கட்சி வளர்ந்து கொண்டிருப்பதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய கட்சி வளர்ந்து கொண்டிருப்பதாகக் கூறியதில் யாருக்கும் வருத்தம் இல்லை. அது அவருடைய பிரச்சினை. எங்களுக்கு அதுகுறித்து எந்த கருத்தும் இல்லை. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் நிலை பற்றி கற்பனை கருத்துகளை பரப்ப முயற்சிக்கக் கூடாது.
தமிழ்நாடும், அ.தி.மு.க.வும் தாயும், சேயும் போல. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல் ஆயுதமாகத் திகழ்வது அ.தி.மு.க. தான். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றி; அனைத்து மக்களும் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அமைதியாகவும், ஒரு தாய் மக்களாக வாழ உருவாக்கப்பட்ட ஒப்பற்ற இயக்கம் அ.தி.மு.க.; இந்த இயக்கம் அரசியலில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் ஆயிரம், ஆயிரம்.
அணையா விளக்குதந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாரதிதாசன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற சமூக நீதிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தன்னலமில்லா தியாகிகள் உருவாக்கிய இந்த திராவிட இயக்கத்தின் பங்களிப்பை தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருக்கிறார்கள். திராவிட இயக்கத்தின், சுமார் ஒரு நூற்றாண்டுப் பணியில் தமிழகம் பெற்றிருக்கும் ஏற்றம் ஊரும், உலகும் அறிந்த உண்மை. இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் தந்தை பெரியார் ஊன்றிய திராவிட இயக்கம் என்ற உணர்வு ஒருபோதும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து மாறாது; மறையாது.
பகுத்தறிவு சிந்தனை, தாய் மொழிப் பற்று, மனிதாபிமான உணர்வு, பெண் கல்வியும் அதன் வழியாக விடுதலையும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற லட்சியப் பயணம் ஆகியவற்றில் இந்திய நாட்டிற்கே தமிழகம் முன்னோடியாக விளங்கக் காரணம் எங்கள் திராவிட இயக்க உணர்வு. இது அணையா விளக்கு. ஆயிரங்காலத்து பயிர்.
எந்நாளும் வாழும்ஏதோ சில சலசலப்புகளை உருவாக்க இந்த இடைப்பட்ட காலத்தில் சில சூழ்ச்சிக்காரர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதால் அ.தி.மு.க. அழிந்துவிட்டது என்று பல ஆண்டுகளாய் அரசியலில் இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது நியாயமல்ல. இது போன்ற சலசலப்புகளை நாங்கள் ஏராளமாக பார்த்து, அனைத்தையும் வெற்றி கண்ட வீரர்கள் கூட்டம் எங்கள் இயக்கம். அ.தி.மு.க. எந்நாளும் வெல்லும், அ.தி.மு.க. எந்நாளும் மக்கள் இதயங்களில் வாழும். தொடர்ந்து வெற்றி நடை போடும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.