சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி மீண்டும் கைது


சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி மீண்டும் கைது
x
தினத்தந்தி 20 March 2017 7:06 PM GMT (Updated: 20 March 2017 7:05 PM GMT)

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

வேலூர் காட்பாடி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஜெ. சேகர் ரெட்டி. இவர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருந்ததுடன், கட்டுமான தொழிலும் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளையும் நடத்தி வந்தார்.

இவர் சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் வசித்து வருகிறார். சேகர் ரெட்டி தனது வீட்டில் பல நூறு கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக வருமான வரி துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கடந்த டிசம்பர் 8ந்தேதி அவரது சென்னை, காட்பாடி வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடந்தது.  அதே நேரத்தில் சேகர் ரெட்டியின் நண்பர்கள் சீனிவாசரெட்டி, பிரேம் ஆகியோரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

சட்டவிரோதமாக பணம் பதுக்கியதாக வருமான வரி துறையினரும், அமலாக்க பிரிவினரும் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி சீனிவாச ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர்.  இதனை அடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.  அதனை அடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.

தங்களுக்கு எதிரான வழக்கில் ஜாமீன் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.  இதனை தொடர்ந்து சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகளுக்கு கடந்த 17ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமலாக்க துறையின் 10 மணிநேர விசாரணைக்கு பின் சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் எழும்பூர் 13வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.  மூவரையும் வரும் 28 ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story