சென்னை போயஸ்கார்டன் வீட்டுக்கு சென்றார் ரஜினிகாந்துடன் மலேசிய பிரதமர் சந்திப்பு
சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சந்தித்து பேசினார்.
சென்னை,
மலேசிய நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் இந்தியாவில் 5 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ளார். கவர்னர் மாளிகையில் அவரை கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். நேற்று காலை நஜீப் ரசாக், போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றார்.
அவரை ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருடன் வரவேற்றார். இருவரும் ஒருமணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். ரஜினிகாந்த் கபாலி படப்பிடிப்புக்காக மலேசியாவில் தங்கி இருந்தபோது பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து பேசினார். அப்போது நான் ரஜினிகாந்தின் ரசிகர் என்று நஜீப் ரசாக் கூறினார்.
கபாலி படப்பிடிப்பு உதவி
கபாலி படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் மலேசிய அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்காக இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர் ரஜினிகாந்துடன் நஜீப் ரசாக் ‘செல்பி’ எடுத்துக்கொண்டார்.
மலேசிய பிரதமர் தன்னை சந்தித்தது குறித்து ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
“நான் மலேசியாவுக்கு கபாலி படப்பிடிப்புக்காக சென்று இருந்தபோது இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருந்தேன். அப்போது பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்தேன். அரசு சார்பில் கபாலி படப்பிடிப்புக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் பிரதமருக்கு நேரில் நன்றி தெரிவிக்க விரும்பினேன். ஆனால் அவர் அரசு அலுவல்களில் தீவிரமாக இருந்ததால் சந்திக்க முடியவில்லை.
மகிழ்ச்சி
சென்னை வரும்போது என் வீட்டுக்கு வரவேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தேன். அதை ஏற்று வீட்டுக்கு வந்து என்னை அவர் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும் சுமுகமாகவும் நடந்தது. கபாலி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளித்ததற்காகவும் எனது வீட்டுக்கு வந்ததற்காகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன். மலேசிய சுற்றுலாவுக்கு என்னை தூதுவராக நியமிக்க இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
“ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியிலும் மகிழ்ச்சியாகவும்” அமைந்தது என்று நஜீப் ரசாக் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
Next Story