ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 April 2017 2:45 AM IST (Updated: 1 April 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

பெயர் நீக்கப்பட்ட 4 லட்சம் பயனாளிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்குவது குறித்து சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி சம்பத், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பெயர் நீக்கம்

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், திருமணமாகாத ஏழை மற்றும் உழைக்க முடியாத பெண்கள் ஓய்வூதியத்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் பயனடைந்து வந்தனர்.

இதில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 478 பேரின் பெயரை பயனாளிகள் பட்டியலில் இருந்து தமிழக அரசு திடீரென நீக்கியுள்ளது. இதனால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓய்வூதியம் பெற தகுதியில்லை என்பதற்கான காரணத்தையும் கூறவில்லை. எனவே, நீக்கப்பட்டவர்களை மீண்டும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்கக்கோரி கடந்த ஆண்டு அரசு செயலாளர்களுக்கு மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இறந்துபோனவர்கள், முகவரி மாறியவர்கள், 2 இடங்களில் பதிவு செய்து ஓய்வூதியம் பெற்றவர்கள் ஆகியோரது பெயர்களை மட்டுமே நீக்கியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் ஓய்வூதிய பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து தமிழக அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த விவரங்களை தமிழக அரசு பரிசீலித்து, தகுந்த நடவடிக்கையை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story