சிறுமியை காதல் திருமணம் செய்த வாலிபர் மீது பாலியல் வன்முறை வழக்கு போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சிறுமியை காதல் திருமணம் செய்த வாலிபர் மீது பாலியல் வன்முறை வழக்கு போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 April 2017 1:08 AM IST (Updated: 2 April 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மீது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னையை அடுத்த நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் வசந்தி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 12–ந் தேதி வசந்தி திடீரென மாயமானார். இதுகுறித்து நெமிலி போலீசில் தந்தை புகார் செய்தார்.

போலீசார் வசந்தியை கண்டுபிடிக்கவில்லை என்பதால் ஐகோர்ட்டில் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் விசாரித்தனர்.

காதல் திருமணம்

வசந்தியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நெமிலி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின்னர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (25) என்பவரை வசந்தி காதலித்து வந்தது தெரிந்தது.

அதோடு, 2 பேரும் பட்டாபிராமில் உள்ள ஒரு கோவிலில் பிப்ரவரி 12–ந் தேதி திருமணம் செய்ததும், அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. போலீசார் வசந்தியை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு பதிவு

நீதிபதிகள் விசாரித்தபோது, பெற்றோருடன் செல்வதாக வசந்தி தெரிவித்தார். எனவே, பாரதி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வசந்தியை பெற்றோரிடம் ஒப்படைக்கவும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.


Next Story