ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா; எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் புகார் மனு
இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதியில் பகிரங்கமாக பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும், உடனே மத்திய பாதுகாப்பு படைகளை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன், சே.பசும்பொன் பாண்டியன், செல்ல ராஜாமணி ஆகியோர் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி.நாயரிடம் புகார் மனு அளித்தனர்.
புகார் மனு அளித்த பின்பு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன், நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆர்.கே.நகர் தொகுதியில் போலீசாரின் கண் முன்பாகவே பணப்பட்டுவாடா பகிரங்கமாக நடக்கிறது.
போலீசாரின் முன் அனுமதி பெற்றுதான் பிரசாரம் செய்கிறோம். இருந்தும் எங்களுடைய பொதுச்செயலாளர் ஜெ.தீபாவுக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசார் மறுக்கிறார்கள்.
மாநில தேர்தல் அதிகாரிகளால் இந்த தேர்தல் முறையாக நடக்காது. எனவே, மத்திய அரசு அலுவலர்களை இந்த தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். நம்முடைய போலீசாரை நம்பி தேர்தலை நடத்துவது இயலாத காரியம். ஆகவே, மத்திய பாதுகாப்பு படை உடனே கொண்டு வரப்படவேண்டும். இந்த தொகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி.தினகரன் அணி ஆகியோர் போட்டிபோட்டுக்கொண்டு பணப்பட்டுவாடாவில் ஈடுபடுகிறார்கள். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.