வார்தா புயல், வறட்சி நிவாரணம் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.2,014 கோடி விடுவித்தது
வார்தா புயல், வறட்சி நிவாரணத்துக்காக ரூ.2,014 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு விடுவித்தது.
சென்னை,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12–ந்தேதி 130 முதல் 140 கி.மீட்டர் வேகம் வரை வீசிய வார்தா புயலால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சேதம் குறித்து நேரில் பார்வையிட தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசு உடனடியாக நிபுணர்குழுவை அனுப்பி வைத்தது. அந்த குழுவினரும் வந்து பார்த்தனர். இந்த சேதத்துக்கு நிவாரணமாக ரூ.22,573 கோடி மத்திய உதவியாக வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.இதுபோல, கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கே ஒட்டுமொத்த தமிழகமும் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், வறட்சியையும் நேரில் பார்வையிட்டு மதிப்பிட தமிழக அரசு விடுத்த கோரிக்கையின்பேரில், மத்திய அரசாங்கம் உயர்மட்ட நிபுணர்குழுவை அனுப்பி, அவர்களும் தமிழ்நாடு முழுவதும் போய் தமிழகத்தில் நிலவும் பரிதாபகரமான சூழ்நிலையை நேரில் பார்த்தனர்.
சொற்ப தொகைவறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39,565 கோடி வழங்கவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 27.2.17 அன்று டெல்லியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, இதுதொடர்பான கோரிக்கை மனுவையும் கொடுத்தார். நேரிலும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு கோரிய தொகையில் மிகச்சொற்பமான தொகையை மத்திய அரசு விடுவித்து உள்ளது.
ரூ.2,014 கோடி விடுவிப்புஇதுதொடர்பாக மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நேற்று ரூ.2,014 கோடியே 45 லட்சத்தை மத்திய உதவியாக வழங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கான இந்த உதவிக்காக கடந்த மார்ச் மாதம் 23–ந்தேதி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது.
இந்த உதவியில் ரூ.1,748 கோடியே 28 லட்சம் வறட்சிக்காகவும் (காரிப் பருவம்), ரூ.264 கோடியே 11 லட்சம் வார்தா புயலுக்காகவும், ரூ.2 கோடியே 6 லட்சம் தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்காகவும் மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆக மொத்தம் ரூ.2,014 கோடியே 45 லட்சத்தை நிதி உதவியாக தமிழகத்துக்கு விடுவிக்கிறது.
வங்கிக்கணக்கில் வழங்கவேண்டும்வார்தா புயலையொட்டி, மத்திய உதவி கேட்டு தமிழக அரசு ஒரு கோரிக்கை மனுவை தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசாங்கம் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு மத்திய குழுவை நிலைமையை மதிப்பிட தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருந்தது.
அந்த குழுவின் மற்றும் தேசிய நிர்வாக குழுவின் துணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரையின்பேரில், உயர்மட்டக்குழு இந்த மத்திய உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வறட்சி மற்றும் புயல் நிவாரண நிதிக்காக மத்திய அரசு விடுவிக்கும் தொகையை மாநில அரசு பாதிக்கப்பட்ட தனி நபர்களுக்கு வங்கிக்கணக்குகள் மூலம் வழங்கிடுவதை உறுதி செய்யவேண்டும். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.