டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம்


டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 April 2017 1:24 AM IST (Updated: 3 April 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

சென்னை,

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பொது வேலை நிறுத்தம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தினமும் வெவ்வேறு வடிவில் இந்த போராட்டத்தை அவர்கள் நடத்துகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. மேலும், இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சிகள் ஆதரவு

இந்த வேண்டுகோளை ஏற்று, தி.மு.க., காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம் அணி, த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையனும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், போராட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறியதாவது:–

தமிழ்நாடு முழுவதும் இன்று அமைதியான வழியில் சாலை மறியல், ரெயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். அதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது.

அதே நேரத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தம் தீவிரமாக இருக்கும். டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story