மாநில செய்திகள்

அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்; போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் நடிகர் ரஜினிகாந்த் + "||" + I am a true Tamilian Rajinikanth

அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்; போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் நடிகர் ரஜினிகாந்த்

அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்; போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் நடிகர் ரஜினிகாந்த்
அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம் என கூறிய நடிகர் ரஜினிகாந்த் அதுவரையில் பொறுத்து இருப்போம் என பேசிஉள்ளார்.

சென்னை,

கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இன்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் அரசியல் நிலவரம் நன்றாக இல்லை என நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். 

நடிகர் ரஜினி காந்த் பேசுகையில், ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்கள் ஒழுக்கத்தை கடைபிடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒழுக்கம்தான் மிகவும் முக்கியமானது. ஒழுக்கமானது அவசியமானது. ஒழுக்கம் இல்லை என்றால் முன்னேற முடியாது. இப்போது போன்று எப்போதும் ஒழுக்கத்தை கடைபிடியுங்கள். இந்த விழாவை ஏற்படுத்தி, சரியாக நிர்வாகம் செய்தவர்களுக்கு நன்றி. எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். அரசியல் குறித்து நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. 

சமூக வலைதளங்களில் பதிவிடும் தகவலானது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு 67 வயது ஆகிறது, நான் கர்நாடகாவில் இருந்தது 23 ஆண்டுகள்தான், ஆனால் 44 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் உள்ளேன். எனக்கு நீங்கள் அன்பு, பெயர், புகழ், பணம் என அனைத்தையும் அள்ளிக்கொடுத்து நீங்கள் என்னை தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள். நான் பச்சை தமிழன். என்னுடைய மூதாதையார்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என ஏற்கனவே கூறிஉள்ளேன். என்னை இருங்கிருந்து வெளியேற சொன்னாலும், வெளியே தூக்கி வீசினாலும் இமயமலையில்தான் விழுவேன தவிர வேறு எந்த மாநிலத்திலும் விழ மாட்டேன். 

தமிழக மக்களில் நல்ல மக்கள் உள்ளனர். நல்ல உள்ளங்கள் வாழும் தமிழக மக்களுடன் தான் நான் இருக்க வேண்டும். என்னை வாழ வைத்தவர்கள் நீங்கள், என்னை வாழவைத்த தெய்வங்களும் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைப்பது தவறா?

அதற்குத்தான் வேறு சிலர் இருக்கிறார்கள் நீ என்ன சரிசெய்யப்போகிறாய் எனக் கேட்கலாம். இருக்கிறார்கள். ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான், திருமாவளன் உள்ளிட்டோர் உள்ளனர். முக ஸ்டாலின் மிகவும் திறமையான நிர்வாகி, சுதந்திரமாக செயல்பட விட்டால் நன்றாக செயல்படுவார், இதனை சோவே கூறிஉள்ளார். எல்லாம் இருக்கலாம் ஆனால் அரசியல் சிஸ்டம் மற்றும் ஜனநாயகம் கெட்டு உள்ளது. மக்களின் சிந்தனையை உருவாக்கினால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முடியும். விமர்சனம் செய்பவர்கள் அவர்களுக்கு தெரியாமலையே நம்மை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

எனவே, போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை நீங்கள் உங்கள் வேலைகளை கவனித்து கொள்ளுங்கள். குடும்பத்தைக் கவனியுங்கள். எனக்கும் தொழில் இருக்கு உங்களுக்கும் தொழில் இருக்கு. போர்வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான் என்றார்.