4 டிகிரி கூடுதல் வெயில் பதிவாக வாய்ப்பு தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும்


4 டிகிரி கூடுதல் வெயில் பதிவாக வாய்ப்பு தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும்
x
தினத்தந்தி 19 May 2017 11:30 PM GMT (Updated: 19 May 2017 6:35 PM GMT)

தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், மேலும் 4 டிகிரி கூடுதலாக வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை காலத்தின் உச்சமான ‘அக்னி நட்சத்திரம்’ தொடங்கி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். திருத்தணி, திருச்சி, வேலூர், மதுரை, கரூர், நெல்லை, வேலூர், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

பிற மாவட்டங்களுக்கு நிகராக தலைநகர் சென்னையிலும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆந்திர பகுதிகளில் தொடர்ந்து, வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அந்த பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி வெப்ப காற்று வீசுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 2 முதல் 3 டிகிரி வெப்பநிலையும், உள் மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் 3 முதல் 4 டிகிரி வெப்பநிலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சூழல் மேலும் 2 அல்லது 3 தினங்களுக்கு நீடிக்கும். கடல் காற்றின் தன்மையை பொறுத்து, வெப்பநிலை குறையும். அதே சமயம் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 1-ந் தேதி முதல் 19-ந் தேதி (நேற்று) வரை கோடை மழை இயல்பாக 43.6 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால் தற்போது அந்த காலக்கட்டத்தில் 42.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 4 சதவீதம் குறைவு ஆகும்.

தக்கலையில் 6 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தக்கலை, போச்சம்பள்ளி, தாளவாடி, துவாகுடியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தேன்கனிகோட்டை, சூளகிரியில் தலா 5 செ.மீ. மழையும், ஈரோடு, குடியாத்தம், அருப்புக்கோட்டை, குளச்சல், குழித்துறையில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தளி, கன்னியாகுமரி, திருவையாறு, திருப்பத்தூர், திருச்சுழி, விராலிமலை, திருப்பூரில் தலா 3 செ.மீ. மழையும், சத்தியமங்கலம், இரணியல், ஒகேனக்கல், பேச்சிப்பாறை, ஸ்ரீவைகுண்டம், நத்தம், பென்னாகரத்தில் தலா 2 செ.மீ. மழையும், சாத்தூர், பீளமேடு, வாடிப்பட்டி, பெரியகுளம், வாணியம்பாடியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story