தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி உருவாகும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி உருவாகும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2017 5:00 AM IST (Updated: 1 Jun 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

மாட்டு இறைச்சி தடை சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி உருவாகும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

விவசாயிகள் நலன் காக்கவும், உணவு உரிமையை பாதுகாக்கவும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், மாட்டு இறைச்சி தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர். திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக் உள்பட தி.மு.க. தோழமை கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

வெறிச்சோடிய மாட்டு சந்தைகள்

ஆர்ப்பாட்டத்தின்போது, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ளதை கண்டித்து நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த காரணத்தால் நாடு முழுவதும் மாட்டு சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

தனி உரிமை மறுப்பு

இப்போது மத்திய அரசு கொடுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த ஆட்சியில் சாதனை என்று பார்த்தால் குறிப்பிட்டு சொல்லும் நிலையில் எதுவும் இல்லை. சாதனைக்கு பதில் நாம் வேதனையைத்தான் அதிகம் சந்தித்து உள்ளோம். ஊழலை ஒழிக்க லோக்பால் கொண்டு வருவோம், வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார்.

இதுவரை ரூ.15 ஆவது ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் போட்டாரா? என்றால் இல்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவோம் என்று கூறினார். ஆனால் அதனை செய்துகொடுக்கவில்லை. இப்போது மாட்டு இறைச்சிக்கு தடை போட்டு இருக்கிறார். நாம் உண்ணும் உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். மோடி எதை விரும்புகிறாரோ அதையே நாமும் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார் என்றால், அரசியல் சட்டம் நமக்கு வழங்கிய தனி உரிமை மறுக்கப்படுவதாகத்தான் கருத முடிகிறது.

வெட்கக்கேடு

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 6 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் 3 முதல்-அமைச்சர்களை பார்த்து இருக்கிறோம். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார். இந்த 3 பேரும் டெல்லிக்கு சென்று பிரதமரை 5 முறை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். அதில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லாமே நேர்மாறாகத்தான் நடக்கிறது. தலைமைச் செயலகத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கோட்டைக்கு வந்து அமைச்சர்கள், அதிகாரிகளை உட்கார வைத்து ஆய்வு நடத்துகிறார். அதோடு அங்கு எச்சரிக்கையும் விடுக்கிறார். ஒழுங்காக செயல்படாவிட்டால் மத்திய அரசின் ஒத்துழைப்பு பெற முடியாது என்கிறார். இதைவிட வெட்கக்கேடு எதுவும் இல்லை. இந்த நிலையில் இப்போதைய ஆட்சி உள்ளது.

எதிர்ப்பு குரல்

மத்திய அரசு இப்போது மாட்டு இறைச்சி சட்டம் போட்டு 8 நாட்களாகி விட்டது. தமிழ்நாட்டில் நாம் எதிர்த்து, குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி உள்பட பல மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளும் மாட்டு இறைச்சி தடை சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்ப்பு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த செய்தியை முழுமையாக படித்து விட்டு தான் பதில் கூறுவேன் என்கிறார். 8 நாட்கள் ஆகியும் சட்டம் பற்றி அறியாத முதல்-அமைச்சர் தான் தமிழகத்தில் இருக்கிறார்.

மாட்டு இறைச்சி தடை விவகாரம் தொடர்பாக கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா, புதுச்சேரி முதல்-மந்திரிகள் உடனே கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட தோழமை கட்சிகள் சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். இதையாவது எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்திருக்கலாம். படித்து பார்த்தால், அவருக்கு வருமான வரி சோதனை மற்றும் சி.பி.ஐ. சோதனை ஆகியவைதான் நினைவுக்கு வரும்.

மெரினா புரட்சி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறைக்கு கிடைத்தது. அதில் உள்ள 8 பேர் பட்டியலில் முதல் பெயர் எடப்பாடி பழனிசாமி பெயராகத்தான் இருந்தது. அதனால் அவருக்கு படித்து பார்க்க அச்சம் ஏற்பட்டு இருக்கலாம்.

மத்திய ஆட்சிக்கும், தமிழ்நாட்டில் உள்ள ஆட்சிக்கும் எச்சரிக்கிறோம். இந்த போராட்டம் முதல் கட்ட போராட்டம்தான். இன்னும் போராட்டம் தொடரும். சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் தீர்ப்பை உணர்ந்து பார்த்து, மத்திய அரசு மாட்டு இறைச்சி தடை சட்டத்தை திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் மீண்டும் மெரினா புரட்சி உருவாகும். அப்படி உருவாகக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட இருக்கிறோம். அதற்கு தயாராக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story