சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது 6 நாட்களுக்குள் தரைமட்டமாகும் என அதிகாரி தகவல்


சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது 6 நாட்களுக்குள் தரைமட்டமாகும் என அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தில் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

சென்னை,

தீ விபத்தில் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இன்னும் 3 முதல் 6 நாட்களுக்குள் கட்டிடம் தரைமட்டமாகும் என அதிகாரி தெரிவித்தார்.

தீ விபத்து

சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் செயல்பட்டு வந்த சென்னை சில்க்ஸ் 7 மாடி துணிக்கடையில் கடந்த 31-ந்தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் மாடியில் தவித்த 14 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் ரசாயன கலவையையும், தண்ணீரையும் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயின் பிடியில் இருந்ததால், கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியானது. இதனால் கட்டிடத்தை குளிர்விக்கும் வகையில், கட்டிடம் முழுவதும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.

இடிக்க முடிவு

கட்டிடத்தின் உள்பகுதி நேற்றுமுன்தினம் அதிகாலை மேல் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இதனால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அபாயம் நிலவியதால், அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகளை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் தடயவியல் துறை, ஐ.ஐ.டி., சி.எம்.டி.ஏ., பொதுப்பணித்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் கட்டுமான ஒப்புதல் துறையை சேர்ந்த வல்லுனர் குழு கட்டிடத்தை ஆய்வு செய்து கட்டிடத்தின் உறுதித்தன்மை அபாயகரமானது என்று அறிக்கை கொடுத்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடித்து தள்ள முடிவு எடுக்கப்பட்டது.

பணி தொடங்கியது

கட்டிடம் இடிக்கும் பணியை பின்புறம் உள்ள வாகன நிறுத்தத்தில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வாகன நிறுத்த பகுதியில் 20 அடி உயரத்துக்கு தற்காலிக மேடு அமைக்கப்பட்டது. இடிபாடுகள் கட்டிடத்துக்கு உள்ளேயே விழுமாறு நவீன முறையில் இடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 85 அடி உயரம் கொண்ட 2 நவீனரக ‘ஜா கட்டர்’ எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20 ஆயிரம் வாடகை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை 10.55 மணியளவில் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கான பணியில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி ஊழியர்களுடன், தனியார் நிறுவன ஊழியர்கள் 120 பேர் ‘ஷிப்டு’ முறையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 5-வது மாடியை இடித்த போது 6, 7-வது தளங்களில் ஒரு பகுதி கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது.

6 நாட்களுக்குள்...

தூண்களை தவிர மற்ற பகுதிகளை இடிக்கும் பணி நடந்தது. இறுதியாக தூண்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட உள்ளது. 7-வது தளத்தில் மீதமுள்ள பகுதியை இடிக்க ‘ஜா கட்டர்’ எந்திரத்தால் எட்ட முடியாததால் கட்டிட இடிபாடுகளை போட்டு, தற்காலிக மேடையை உயரப்படுத்தும் பணி நடைபெற்றது.

கட்டிட இடிப்பு பணி குறித்து தீயணைப்பு துறை துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “தீ விபத்து நடந்த கட்டிடத்தை சுற்றி இடம் இருந்திருந்தால் நாலாபுறமும் நின்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டு வந்திருப்போம். அதற்கான வசதி இல்லாததே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. 3 முதல் 6 நாட்களுக்குள் கட்டிடம் முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்படும்”, என்றார்.

பணி நிறுத்தம்

இதனிடையே இருட்டி விட்டதால் நேற்று மாலை 6 மணிக்கு கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இடிப்பு பணி இன்று (சனிக்கிழமை) மீண்டும் நடத்த உள்ளனர்.

கட்டிட இடிப்பு பணியால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். விரைவாக கட்டிடத்தை இடித்து முடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்புவாசிகள் வேண்டுகோள்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் போது, அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அக்குடியிருப்பில் வசிக்கும் மலர்விழி கூறுகையில், “தீ விபத்து நடந்த மறுநாளே நாங்கள் வெளியேறிவிட்டோம். கட்டிடம் இடிக்கும் பணியால் எங்கள் வீட்டு சுவர்களில் பெரிய விரிசல்கள் விழுந்துள்ளன. எங்கள் குடியிருப்பு கட்டிடம் விழுந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது”, என்றார்.

குடியிருப்புவாசி ராணி கூறுகையில், “கட்டிடம் இடிக்கப்பட தொடங்கியதுமே எனது வீட்டில் அதிக விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. எந்த நேரத்திலும் மேற்புற சுவர் இடிந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே எங்கள் குடியிருப்பு கட்டிடத்தை புணரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ளவர்களை அவர்கள் தெருக்களுக்கு வருவதற்கு கூட அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கெடுபிடிகளை போலீசார் விதித்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.

Next Story