குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 3 Jun 2017 3:45 AM IST (Updated: 3 Jun 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. மெயின் அருவி, ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த 3 மாதங்களும் குற்றாலம் பகுதியில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்யும். இடையிடையே இதமான வெயிலும் அடிக்கும். குளிர்ந்த காற்று வேகமாக வீசும்.

இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளிலும், குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி, தேனருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். இத்தகைய ரம்மியமான சூழலை அனுபவிக்கவும், அருவிகளில் ஆனந்த குளியல் போடவும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருவார்கள்.

சீசன் தொடங்கியது

கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் குறைவாக விழுந்தது.

இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து குற்றாலத்திற்கு படையெடுத்து வந்தனர். அவர்கள், அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கத்திலேயே சீசன் தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் நேற்று மாலை மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணி அளவில் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரண்டு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story