மு.க.ஸ்டாலின் வீட்டில் சர்க்கரை பொங்கல், வடை சாப்பிட்ட ராகுல்காந்தி


மு.க.ஸ்டாலின் வீட்டில் சர்க்கரை பொங்கல், வடை சாப்பிட்ட ராகுல்காந்தி
x
தினத்தந்தி 4 Jun 2017 5:00 AM IST (Updated: 4 Jun 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வந்த ராகுல்காந்தி அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 35 நிமிடங்கள் உரையாடினார்.

சென்னை,

மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வந்த ராகுல்காந்தி அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 35 நிமிடங்கள் உரையாடினார். சர்க்கரை பொங்கல், வடை சாப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற ராகுல்காந்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற 60 ஆண்டுகால பணி நிறைவு விழா ஆகிய இரு பெரும் விழாவில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தார்.

நேற்று மாலை 4.40 மணிக்கு ராகுல்காந்தி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார்.

அவரை வீட்டு வாசல் வரை வந்து மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீஷன் மற்றும் மு.க.ஸ்டாலினின் பேரக்குழந்தைகள் வரவேற்று, வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

ராகுல்காந்திக்கு, மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் தேனீர் விருந்து அளித்தார். தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் ராகுல்காந்தியிடம் அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் ராகுல்காந்தியும், மு.க.ஸ்டாலினும் சிறிது நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.

சர்க்கரை பொங்கல், வடை

ராகுல் காந்திக்கு துர்கா ஸ்டாலினும், செந்தாமரையும் தங்கள் கைப்பட தயாரித்த நெய் மணக்கும் சர்க்கரை பொங்கல், வடை, பல வகை சட்னி ஆகியவற்றை பரிமாறினர்.

அதை ராகுல்காந்தி ருசித்து சாப்பிட்டார். பின்னர் மு.க.ஸ்டாலினின் பேரக்குழந்தைகளிடம் பேசிய ராகுல், ஒவ்வொருவரிடமும் பெயரை கேட்டார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

சுமார் 35 நிமிடங்கள் அங்கிருந்த ராகுல்காந்தி பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் ராயப்பேட்டை நோக்கி புறப்பட்டார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஓட்டலில் விருந்து

இதற்கிடையே, கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விருந்து நிகழ்ச்சியோடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. அவருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேக் வழங்கினார். 

Next Story