சென்னையில் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் சினிமா கிராபிக்ஸ் நிபுணர் கைது


சென்னையில் நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் சினிமா கிராபிக்ஸ் நிபுணர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2017 3:00 AM IST (Updated: 5 Jun 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சினிமா கிராபிக்ஸ் நிபுணர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் வரவேற்பு அறை அருகே கடிதம் ஒன்றை ஊழியர்கள் நேற்றுமுன்தினம் அதிகாலை 3.15 மணியளவில் கண்டு எடுத்தனர். அந்த கடிதத்தில், ‘சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டலின் 4-வது தளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. 4-ந்தேதி (நேற்று) வெடித்து சிதறும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஓட்டலின் பொது மேலாளர் அரிந்தம் குணார் தேனாம்பேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் கிரி மற்றும் போலீசார் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்து சென்றனர். வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. ஓட்டல் முழுவதும் சோதனை நடத்தப்பட்டதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

சினிமா கிராபிக்ஸ் நிபுணர்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் தேனாம்பேட்டை உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3 வாலிபர்களுடன் ஓட்டலுக்கு வந்திருந்த நபர் ஒருவர், ஓட்டல் வரவேற்பு அறையில் உள்ள வருகை பதிவேட்டின் உள்ள தாளை எடுத்து கடிதம் எழுதும் காட்சி பதிவாகி இருந்தது.

அவர்கள் அனைவரும் ஓட்டலில் மது அருந்த வந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் கடிதம் எழுதியது சென்னை திருவான்மியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த அருண்குமார்(44) என்பதும், சினிமா கிராபிக்ஸ் நிபுணராக அவர் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதியது குறித்து வருண்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு நான் நண்பர்களுடன் சேர்ந்து அடிகடி மது அருந்துவது வழக்கம். அதன்படி கடந்த 3-ந்தேதி இரவு நண்பர்களுடன் சென்று இருந்தேன். அன்றைய தினம் விடிய, விடிய மது அருந்தினோம்.

போதையில் ஓட்டல் ஊழியர்களுக்கும், எனக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஊழியர்கள் என்னை தரக்குறைவாக திட்டி விட்டனர். இதனால் ஓட்டல் நிர்வாகத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை எழுதினேன். மதுபோதை மற்றும் ஆத்திரத்தில் இவ்வாறு நடந்துகொண்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட அருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஓட்டலில் தான் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 3-வது தென்மண்டல மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story