ஒரே நேரத்தில் இறந்தது எப்படி? வீட்டுக்குள் புதைத்த இரட்டை குழந்தைகள் உடல்கள் தோண்டி எடுப்பு


ஒரே நேரத்தில் இறந்தது எப்படி? வீட்டுக்குள் புதைத்த இரட்டை குழந்தைகள் உடல்கள் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 5 Jun 2017 3:00 AM IST (Updated: 5 Jun 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு வளாகத்தில் புதைத்த அந்த குழந்தைகளின் உடல்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன.

ஈத்தாமொழி,

நாகர்கோவில் அருகே பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகள் ஒரே நேரத்தில் இறந்தது எப்படி? என்பதை கண்டறிய வீட்டு வளாகத்தில் புதைத்த அந்த குழந்தைகளின் உடல்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன. குழந்தைகளின் உடல்களை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இரட்டை பெண் குழந்தைகள் சாவு

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 39), தொழிலாளி. அவருடைய மனைவி திவ்யா (29). இவர்களுடைய மகள் அனுஷ்கா (2). இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமுற்ற திவ்யாவுக்கு கடந்த 22-ந்தேதி நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

ஆஸ்பத்திரியில் இருந்து இரட்டை குழந்தைகளுடன் வீடு திரும்பிய திவ்யா, கண்ணங்குளத்தில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 2-ந்தேதி அதிகாலையில் இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகளும் பரிதாபமாக இறந்துகிடந்தன. இதுபற்றி திவ்யாவின் குடும்பத்தினர் கூறுகையில், தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகளும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் குழந்தைகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.

உடல்கள் தோண்டி எடுப்பு

குழந்தைகளின் உடல்கள், காற்றாடித்தட்டில் உள்ள திவ்யாவின் வீட்டு வளாகத்திலேயே புதைக்கப்பட்டதால் நேற்று காலையில் குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுக்கும் பணி நடந்தது. அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு முன்னிலையில் இந்த பணி நடந்தது.

இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். காற்றாடித்தட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்களும் அங்கு திரண்டனர். புதைக்கப்பட்டு இருந்த இடத்தை திவ்யாவும், அவருடைய கணவர் கண்ணனும் அடையாளம் காட்டியபின்பு தோண்டும் பணி நடந்து, இரண்டு குழந்தைகளின் உடல்களும் வெளியே எடுக்கப்பட்டன.

பிரேத பரிசோதனை

2 குழந்தைகளின் உடல்களையும் துணியால் மூடி, வேப்பமர இலைகளை போட்டு புதைத்திருந்தது தெரியவந்தது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஷ் உள்ளிட்ட 2 டாக்டர்கள் இணைந்து அங்கேயே 2 குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். ஒரு மணி நேரம் இந்த பரிசோதனை நடந்தது. பின்னர் குழந்தைகளின் உடல்கள் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டன.

அதன்பின்பு திவ்யாவிடமும், அவருடைய கணவர் கண்ணனிடமும் குழந்தைகள் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ரசாயன ஆய்வு

பிரேத பரிசோதனை தொடர்பாக போலீசார் கூறும் போது, “குழந்தைகளின் உடலில் வெளிக்காயம் இருப்பதாக தெரியவில்லை. எனினும் சந்தேகம் தொடர்ந்து நீடிப்பதால் அதில் உள்ள மர்மத்தை அறிய குழந்தைகளின் உடற்பாகங்கள் சில சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ரசாயன ஆய்வுக்காக நெல்லைக்கு அனுப்பி உள்ளோம். அந்த பரிசோதனை விவரங்களும், டாக்டர்கள் நடத்திய பிரேத பரிசோதனைக்கான அறிக்கையும் வந்த பிறகுதான் குழந்தைகள் சாவுக்குரிய காரணம் தெரியவரும்” என்றனர்.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜேஷிடம் கேட்டபோது, “குழந்தைகளின் இறப்பு தொடர்பாக இப்போது எதுவும் சொல்ல முடியாது. பிரேத பரிசோதனை அறிக்கை நாளை (அதாவது இன்று) போலீசாரிடம் வழங்கப்படும்” என்றார். 

Next Story