வயதானவர்களை வைத்து வைர விழா நடத்தியதாக விமர்சனம்: ‘‘பொன்.ராதாகிருஷ்ணனிடம் இப்படிப்பட்ட கருத்தை எதிர்பார்க்கவில்லை’’


வயதானவர்களை வைத்து வைர விழா நடத்தியதாக விமர்சனம்: ‘‘பொன்.ராதாகிருஷ்ணனிடம் இப்படிப்பட்ட கருத்தை எதிர்பார்க்கவில்லை’’
x
தினத்தந்தி 6 Jun 2017 3:05 AM IST (Updated: 6 Jun 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

வயதானவர்களை வைத்து வைர விழா நடத்தியதாக விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணனிடம், ‘இப்படிப்பட்ட கருத்தை எதிர்பார்க்கவில்லை’, என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

காயிதே மில்லத் 122–வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கனவை நிறைவேற்றும் வகையில்...

காயிதே மில்லத்தின் 122–வது பிறந்த நாளில் உள்ளபடியே அவருக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டுமெனில், இப்போது மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியானது அவரது கனவை நிறைவேற்றும் வகையில், அதற்கான பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும்.

மிருக பலத்துடன் இருக்கக்கூடிய பா.ஜ.க. ஆட்சி தேவையில்லாத வகையில், இந்தியை திணிக்கின்ற, ஆதிக்கம் செலுத்துகின்ற முயற்சியில் எப்படி ஈடுபடுகிறார்களோ, அதேபோல தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

அரசியல் நாகரிகம்

கேள்வி:– கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவை, பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்து இருக்கிறாரே?,

பதில்:– வைர விழாவை விமர்சித்தது மட்டுமல்ல, ‘வயதானவர்களைக் கொண்டு இந்த விழாவை நடத்தி இருக்கிறார்கள்’, என்று 16 வயது இளைஞரான பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்து இருக்கிறார். சீனியர் சிட்டிசன்களை கொச்சைப்படுத்துகின்ற வகையில், அவமதிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் இந்தக் கருத்தை சொல்லி இருக்கிறார். அவரிடத்தில் இப்படிப்பட்ட கருத்துகளை எதிர்பார்க்கவில்லை.

கேள்வி:– நாட்டை காவிகள் ஆளலாம், பாவிகள் தான் ஆளக்கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறாரே?

பதில்:– இந்த கருத்து அவரது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது.

தேர்தல் கூட்டணியா?

கேள்வி:– அரசியல் கட்சிகள் தனித்தனியாக செயல்படுகின்றன. காயிதே மில்லத் பிறந்த நாள் விழாவிலாவது அவை ஒன்று சேருமா?

பதில்:– இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற ஆட்சியானது மதவாத அடிப்படையில், பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலான ஆட்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்துகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். கூட்டணி என்பது தேர்தல் வருகின்ற நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.  மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.


Next Story