பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க உரிய சட்டத்திருத்தங்கள் வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க உரிய சட்டத்திருத்தங்கள் வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Jun 2017 10:15 PM IST (Updated: 6 Jun 2017 7:26 PM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க உரிய சட்ட திருத்தங்கள் வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பயன் இல்லை

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத்தால் மட்டுமே பல்கலைக்கழகங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழலையும் தடுத்துவிட முடியாது.

அதுமட்டுமின்றி, இந்த அவசரச் சட்டம் பல வி‌ஷயங்களில் தெளிவாக இல்லை என்பதால் அந்தச் சட்டத்தாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

ஊழலை ஒழிக்க..

துணைவேந்தர் தேர்வுக்குழுவின் உறுப்பினராக உள்ள அனைவரும் துணைவேந்தருக்கான தகுதியைவிட கூடுதல் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்தில் சேர்க்க வேண்டும். துணைவேந்தர் நியமனத்திற்கான அனைத்து நடைமுறைகளும் வெளிப்படையாக அமைய வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் உள்ளிட்ட தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர்களையும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடைசியாக கவர்னருக்கு பரிந்துரைக்கப்படும் 3 பேரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக்குழு வெளியிட வேண்டும். அப்போது தான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழலை ஒழிக்க முடியும்.

கவர்னர், அரசு முன்வர வேண்டும்

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்க தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இந்த அம்சங்களை எல்லாம் உள்ளடக்கிய விரிவான சட்டத்தை உருவாக்குவதன் மூலம் தான் பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க முடியும். உயர்கல்வியின் நலன் காப்பதற்காக இதை செய்ய கவர்னரும், அரசும் முன்வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story