அரசு கவிழ்வதற்கு வாய்ப்பு இல்லை: 2 நிபந்தனைகளை நிறைவேற்றினால் 24 மணி நேரத்தில் அ.தி.மு.க. இணையும்
2 நிபந்தனைகளை நிறைவேற்றினால் அ.தி.மு.க. இணையும் என்றும், அரசு கவிழ்வதற்கு வாய்ப்பு இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தற்போது தமிழக சட்டசபையில் சபாநாயகர் நீங்கலாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேர் உள்ளனர். முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது வரை 93 எம்.எல்.ஏ.க்களே ஆதரவாக உள்ளனர்.
3 அணிகளாக அ.தி.மு.க. செயல்படுவதால் வருகிற 14–ந்தேதி சட்டசபை கூடும்போது, எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவசர அழைப்புஇந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு இன்று (புதன்கிழமை) சென்னைக்கு வருமாறு ‘திடீர்’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று பிற்பகல் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளித்து ஆட்சி கவிழ்வதில் இருந்து காப்பாற்றுவதா? அல்லது தனித்து செயல்படுவதா? என்பது குறித்தும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் எதிர்கால அரசியல் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக அடுத்தகட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. ஜெயலலிதா உருவாக்கிய அரசு கவிழ்வதை விரும்பாத, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கவிழ வாய்ப்பு இல்லைஇந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:–
கேள்வி:– டி.டி.வி.தினகரனுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அரசு மெஜாரிட்டி இழந்து நிற்கிறது. அரசுக்கு ஆபத்து வந்தால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:– 29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை பார்த்தார்கள் என்பதால், அவர்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்றோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் என்றோ கருதமுடியாது. டி.டி.வி.தினகரனை பார்த்த எம்.எல்.ஏ.க்கள் அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்த அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை.
2 நிபந்தனைகள்எங்களை பொறுத்தவரை 2 நிபந்தனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.
அதாவது சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும். மற்றொன்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான். இந்த நிபந்தனைகளை எளிதில் நிறைவேற்றும் காலம் தற்போது நெருங்கிவிட்டது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளும் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.