பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் – சீருடைகள்


பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் – சீருடைகள்
x
தினத்தந்தி 8 Jun 2017 4:15 AM IST (Updated: 8 Jun 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் – சீருடைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள் மற்றும் சீருடைகளை வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். இதனைதொடர்ந்து பிற பள்ளிகளிலும் விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

பிளஸ்–2 தேர்வில் ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 99.3 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதற்கு, சிறப்பான கற்பித்தல் திறனை வெளிப்படுத்திய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை சசி ஸ்வரன் சிங்குக்கு, அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து அவர் பேசியதாவது:–

யோகா பயிற்சி

கல்வி நிறுவனங்களின் தேவைகளை இந்த ஆண்டு இறுதிக்குள்ளே நிறைவேற்றி கொடுக்கப்படும். மாணவர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கப்படும். சாலை விதிகளை மதிக்கும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 தேர்வுகளுக்கு எப்படி வினாத்தாள் வர இருக்கிறது? என்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டியது உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். இதற்கான பணிகள் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவடையும்.

பிளஸ்–1 பொதுத்தேர்வு கொண்டுவந்திருப்பது குறித்து மாணவர்கள் அச்சப்படவேண்டியது இல்லை. சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல கல்வியை கற்று தருவார்கள். மாணவர்கள் சிறந்த கல்வியாளர்களாக உருவாகி, இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கவேண்டும்.  இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

மாதிரி வினாத்தாள்

கேள்வி:– வினாத்தாள், விடைத்தாள் மாற்றம் குறித்த அறிவிப்பு எப்போது இருக்கும்?

பதில்:– பிளஸ்–1 படிக்கும் மாணவர்களுக்கு என்ன வினாத்தாள் வரப்போகிறது என்று ஒரு அச்சம் இருக்கிறது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் ஒரு மாதிரி வினா–விடைத்தாள் அரசு தரப்போகிறது. அப்படி தந்தால் தான் ஆசிரியர்களும் பயிற்சி அளிக்க முடியும். மாணவர்களும் தெரிந்து கொள்வார்கள். ஒரு வார காலத்தில் அது வழங்கப்படும்.

கேள்வி:– நீட், ஜே.டபுள்யூ போன்ற நுழைவுத்தேர்வுக்கு சிறப்பு பயிற்சி எப்படி வழங்க போகிறீர்கள்?

பதில்:– மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத்தேர்வுகளையும் மாணவர்கள் சந்திப்பதற்கு ஒன்றியத்துக்கு ஒரு இடம் வீதம் வாரத்துக்கு ஒரு நாள் (சனிக்கிழமை) 3 மணி நேரம் மத்தியில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

கேள்வி:– கல்வித்துறை சார்பாக 42 அறிவிப்புகள் வெளியிடப்போவதாக தெரிவித்தீர்கள். அது எப்போது அறிவிக்கப்பட இருக்கிறது?

பதில்:– வருகிற 15–ந் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை வருகிறது. அதில் எதிர்பார்க்கலாம்.

நீட் தேர்வுக்கு விலக்கு?

கேள்வி:– சீருடைகளின் அளவுகள் சரியாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே? மாணவர்களுக்கு சீருடைகள் அளவு எடுத்து தைக்கப்படுமா?

பதில்:– முதல்–அமைச்சரிடம் பேசி இருக்கிறேன். அதுபற்றி இன்னும் ஒருவார காலத்தில் தெளிவான முடிவு தெரிவிக்கப்படும்.

கேள்வி:– நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா?

பதில்:– அதற்கான முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் தேர்வு கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தி தான் வருகிறோம்.

கேள்வி:– அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேர்க்கப்படும் என்ற செய்தி பரவுகிறதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:– கல்வி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. சிறந்த கல்வியாளர்கள் அரசு பள்ளி, கல்லூரிகளில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதற்கான பட்டியலை தரவும் நான் தயார். அப்படிப்பட்ட நிலையில் எல்லோரும் அதற்கு ஒத்துழைப்பு தருவார்கள். அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு நாங்கள் செய்து வருகிறோம். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து இருக்கிறார்கள்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரெ.இளங்கோவன், தொடக்கக்கல்வி இயக்குனர் கார்மேகம், இணை இயக்குனர்கள் பாஸ்கர சேதுபதி, நரேஷ், செல்வக்குமார், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்த், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.


Next Story