கட்சி ஒற்றுமையை சசிகலா விரும்புவதாக தகவல்: அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு முயற்சியில் சசிகலா தம்பி திவாகரன்
கட்சி ஒற்றுமையை சசிகலா விரும்புவதாகவும், தற்போது இரு அணிகளின் இணைப்பு முயற்சியில் சசிகலா தம்பி திவாகரன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் புயல் வீசி வருகிறது. அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்று இரண்டாக பிரிந்த அ.தி.மு.க. தற்போது 3 ஆக உடைந்துள்ளது. அ.தி.மு.க. (அம்மா) அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவரை ஆதரித்து வந்த 122 எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலா மனமாற்றம்அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் பெற்று திரும்பியதும், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் சசிகலாவிற்கு மட்டுமே உள்ளது என்றும், 60 நாட்கள் காத்திருந்து கட்சி நடவடிக்கைகளை கவனிப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே, கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாகவும், கட்சி, ஆட்சி பணியில் தன்னுடைய உறவினர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்று அவர் நினைக்க தொடங்கியிருப்பதாகவும், கட்சி ஒற்றுமைக்காக சில நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலா தம்பி முயற்சிஇந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், சசிகலாவின் தம்பி திவாகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கட்சி இணைப்பிற்கான பேச்சுவார்த்தையை முன் எடுத்து வருவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி நேற்று முன்தினம் முதல் திவாகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகிகளுடனும், எடப்பாடி பழனிசாமி அணியினருடனும் பேசி வருகிறார்.
பல விஷயங்கள் இந்த பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலான விஷயங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. ஒரு சில விஷயங்களில் மட்டும் முடிவு எட்டப்படவில்லை. நேற்று இரவும் திவாகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினருடன் பேசினார். இரு தரப்பிலும் தெரிவிக்கப்படும் விஷயங்கள் குறித்து சுமுகமான தீர்வு ஏற்பட ஆலோசனைகளை வழங்கினார்.
ஓரிரு நாளில் தீர்வுஇந்த பேச்சுவார்த்தையின் போது திவாகரன் மத்தியஸ்தராக இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு ஏற்பட வழிவகை செய்தார். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் உடனுக்குடன் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டதாக தெரிகிறது. எனவே சசிகலாவின் தம்பி திவாகரன் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஓரிரு நாளில் இணைப்பிற்கான முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.