ஈரான் சிறையில் இருந்து விடுதலை: 15 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்


ஈரான் சிறையில் இருந்து விடுதலை: 15 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்
x
தினத்தந்தி 9 Jun 2017 3:45 AM IST (Updated: 8 Jun 2017 11:26 PM IST)
t-max-icont-min-icon

ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 15 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (வயது 30), பாலமுருகன் (29), மரியசெல்வம் (33), பாண்டி (50), ராசு (30), நம்புகுமார் (37), ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (40), ராமகிருஷ்ணன் (45), கண்ணன் (30), முனுசாமி (31), சின்னையா (50), மற்றொரு கண்ணன் (40), தங்கச்செல்வன் (35), குப்புசாமி (43), லூயிஸ் (40) ஆகிய 15 மீனவர்கள் கடந்த ஆண்டு மீன்பிடி தொழிலுக்காக துபாய் சென்றனர்.

அங்கு தனியார் நிறுவனம் மூலம் கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 15 பேரையும், குஜராத் மீனவர்கள் 2 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்து ஈரான் சிறையில் அடைத்தனர்.

விடுதலை

இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய–மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் ஈரான் நாட்டுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன்பயனாக கடந்த மாதம் 28–ந் தேதி தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை திரும்பினர்

பின்னர், இந்திய தூதரக அதிகாரிகள் முயற்சியால் துபாயில் இருந்து விமானம் மூலம் தமிழக மீனவர்கள் நேற்று சென்னை திரும்பினர். சென்னை வந்த மீனவர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை ஆணையர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் வந்திருந்த மீனவர்களை கண்ட உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் மீனவர்கள் கூறுகையில், ‘துபாய் கடல் பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது திடீரென ஈரான் நாட்டு கடற்படையினர் வந்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். எங்களை சில நாட்கள் கப்பலில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர். எங்களுக்கு தண்ணீர், உணவு கூட தரவில்லை’ என்று தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story