சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும்; தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சட்டவிரோத மது விற்பனையை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பா.ம.க. புகார்தமிழ்நாட்டில் சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்ட பிறகும், மது வணிகம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவதற்கு பதிலாக விகிதாச்சார அடிப்படையில் அதிகரித்திருக்கிறது. வருவாயை இழக்க மனமில்லாத அரசு மதுவை சட்டவிரோதமாக விற்கிறது என்ற பா.ம.க. புகாரை இது உறுதி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக செயல்பட்டு வந்த மதுக்கடைகளில் 50 சதவீத கடைகள் மூடப்பட்டுவிட்டன. அவ்வாறு இருக்கும்போது மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயும் 50 சதவீத அளவுக்கு குறைந்திருக்க வேண்டும். மாறாக, 50 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், 15 சதவீதம் மட்டுமே வருமானம் குறைந்திருப்பதாக கூறப்படுவது ஏற்கத்தக்கதாக இல்லை. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகளைத் தாண்டி சட்டவிரோதமாக பல இடங்களில் மது விற்பனை செய்யப்படுகிறது என்பதையே இது உறுதி செய்கிறது.
கள்ளச்சந்தையில் விற்பனைஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை அதிகபட்சமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மது வணிகம் நடைபெற்ற பல மதுக்கடைகளில் இப்போது ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மதுவணிகம் நடைபெறுகிறது. சில்லரை வணிகத்தில் இந்த அளவுக்கு மது விற்பனையாக வாய்ப்பே இல்லை. மாறாக பெட்டி பெட்டியாக மதுவை தனியாருக்கு விற்று அதை அவர்கள் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் மட்டுமே இந்த அளவுக்கு மது வணிகம் செய்ய முடியும். இந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
மது மூலம் கிடைக்கும் வருவாயை இழந்துவிடக்கூடாது என்பதற்காக குடியிருப்புப் பகுதிகளில் கூட மதுக்கடைகளை திறக்க முயல்வதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை தாக்கி கைது செய்வதும் கண்டிக்கத்தக்கவை. ஓர் அரசாங்கம் அதன் செலவுகளுக்கு மது வணிகத்தை நம்பியிருப்பதை விட அசிங்கம் வேறு எதுவுமில்லை. எனவே சட்டவிரோத மது விற்பனையை அரசு தடுத்து நிறுத்துவதுடன், அனுமதிக்கப்பட்ட மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.