பணமோசடி புகாரில் சி.பி.ஐ. விசாரணை கோரி வேந்தர் மூவிஸ் மதன் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்; வக்கீல் வாதம்
பண மோசடி புகாரில் வேந்தர் மூவிஸ் மதன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அவரது வக்கீல் கூறினார்.
சென்னை,
தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பலரிடம் 84 கோடியே 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்தனர்.மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பெற்ற பணத்தை மதன், ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் மதனை கைதுசெய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதன், சென்னை 3–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஏஜென்டாகவே செயல்பட்டார்இந்த மனு நீதிபதி அருள்முருகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மதன் தரப்பில் வக்கீல் இன்பென்ட் தினேஷ் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:–
மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக பல மாணவர்களின் பெற்றோர் அளித்துள்ள புகாரில் மதன் ஏஜென்டாக செயல்பட்டதாகவே கூறி உள்ளனர். மற்றபடி பணத்தை மதனிடம் கொடுத்ததாக யாரும் புகாரில் கூறவில்லை. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் பணத்தை கொடுத்ததாகவே அனைவரும் தெரிவித்துள்ளனர்.
அப்படி இருக்கும்போது பணத்தை ஹவாலா மூலம் மதன் பரிமாற்றம் செய்ததாக கூறுவது சரியல்ல. உண்மையிலேயே பணம் பெற்றவர்கள் மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மதனை மட்டும் கைது செய்துள்ளது. மதன் தன்னிடம் உள்ள சொத்துகள் குறித்த விவரத்தை ஏற்கனவே ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். வெறும் 1½ கோடி ரூபாய்க்கு மட்டுமே அவரிடம் சொத்து உள்ளது.
சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரில் மதன் அப்பாவி. எனவே தான், இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதன் சிறையில் இருந்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். போலீசாரின் விசாரணைக்கு மதன் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எனவே, மதனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு வக்கீல் கூறினார்.
ஜாமீன் வழங்க ஆட்சேபம்அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் தண்டபாணி, ‘சுமார் 84 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. இந்த பணம் எங்கு சென்றது என்பதை மதன் மூலம் கண்டறியவே அவரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் 133 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. மதனை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே, மதனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று(9–ந்தேதி) தள்ளிவைத்தார்.