அன்னிய செலாவணி மோசடி புகார்: டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு; சாட்சி விசாரணைக்காக வழக்கு தள்ளிவைப்பு
அன்னிய செலாவணி மோசடி புகாரில் டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்தார். இதன்பின்பு, சாட்சி விசாரணைக்காக வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை,
அ.தி.மு.க. அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது சென்னை எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில், 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் அமலாக்கப்பிரிவால் தொடரப்பட்டது.
அதில் ஒரு வழக்கு, இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாகும்.
இன்னொரு வழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஓட்டல் தொடங்குவதற்காக 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலர், ஒரு லட்சம் பவுண்டு ஆகியவற்றை டிப்பர் இன்ஸ்வெஸ்ட்மென்ட் நிறுவனம் உள்பட 3 நிறுவனங்கள் மூலம் முறைகேடாக இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் டெபாசிட் செய்ததாகும்.
குற்றச்சாட்டு பதிவுஇதில், முதல் வழக்கில் ஏற்கனவே டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 2–வது வழக்கு எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மலர்மதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.
டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட்டு படித்து காண்பித்தார். இதன்பின்பு, இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று மாஜிஸ்திரேட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு தினகரன், குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்தார்.
இதை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்து கொண்டார். இதன்பின்பு, அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்த 2 வழக்குகளிலும் அரசு தரப்பு சாட்சிகளை விசாரிப்பதற்காக 22–ந் தேதிக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார்.