சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jun 2017 4:23 AM IST (Updated: 9 Jun 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை அடுத்த மாதம் (ஜூலை) 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பு முறை இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வரிச்சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்திலும் இந்த சட்டம் அமைந்தாலும், இதனை அமல்படுத்துவதால் எந்தவொரு தரப்பைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.

கடந்த 3.8.2016 அன்று சரக்கு மற்றும் சேவை வரிச் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, பேசிய மத்திய மந்திரி அருண்ஜெட்லி, ‘இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் மாநிலங்கள் தங்கள் அதிகாரங்களை யாருக்கோ விட்டு கொடுக்கப்போவதில்லை. மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து சிறந்த வரிவிதிப்பு முறையை கொண்டுவர முயற்சி செய்யும் போது, நாட்டின் நலன் கருதி அதை ஏற்றுக் கொள்ளலாம்’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாட்டின் நலன் கருதி, அந்த நல்லெண்ணத்தில்தான் தி.மு.க. சார்பில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டது.

அச்சம்

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இதுவரை மாநில நிதி அமைச்சர்களுடன் 15 கூட்டங்களை நடத்தியிருக்கின்ற மத்திய நிதி மந்திரி, பல்வேறு பொருட்களுக்கான வரிகளை அறிவித்து வருகிறார். 5 முதல் 28 சதவீதம் வரையில், 1,200–க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரிவிதிப்பு முறைகளையும், சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளையும் வகுத்திருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தில் இருக்கும் மக்கள் மத்தியில், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மூலம், தாங்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.

குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள், ஓட்டல்கள், வட்டார மொழி சினிமா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளி தொழில், பீடி தொழில், தங்க நகை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வரி விகிதத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

மறுபரிசீலனை

இவை ஒருபுறமிருக்க, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமலுக்கு வருவதால் விலைவாசி உயரும் என்று வணிகர் சங்கங்கள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகிறார்கள். வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள், முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக உள்ளன என்று நுகர்வோர் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் கடும் விலைவாசி உயர்வை சந்திக்க நேரிடுமோ என்ற கவலை அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. செப்டம்பர் 2017–க்குள் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்று ஏற்கனவே மத்திய நிதி மந்திரி அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது இவ்வளவு கவலைகளும், அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலும் குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை அவசர அவசரமாக அமல்படுத்துவது பற்றி மத்திய நிதி மந்திரி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

செப்டம்பர் மாதத்திற்கு...

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசி கருத்துக் கேட்பது போல், சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் பாதிக்கப்படுவோம் என்று அச்சம் கொண்டுள்ளவர்களையும் அழைத்துப்பேசி, எந்தத்தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஆகவே, அதற்குரிய கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஜூலை மாதம் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை, தள்ளிவைக்க வேண்டும் எனவும், அந்தக்கால அவகாசத்தை பயன்படுத்தி மக்களின் கவலையை நீக்கி, ஏற்கனவே நிதி மந்திரி அறிவித்தது போல் செப்டம்பர் மாதத்திலேயே சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தை அமல்படுத்துமாறும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story