அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: ஒரு சில நாட்களில் கூடுதல் மணல் குவாரிகள் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: ஒரு சில நாட்களில் கூடுதல் மணல் குவாரிகள் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 10 Jun 2017 5:15 AM IST (Updated: 10 Jun 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

“இன்னும் ஒரு சில நாட்களில் கூடுதல் மணல் குவாரிகள் திறக்கப்படும். அதிக விலைக்கு மணல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் 129 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.231 கோடியே 23 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. கட்டுமான பணி தொடங்கியதில் இருந்து, 11 மாதங்களில் மொத்தம் 48 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அரசு மருத்துவமனையில் 700 படுக்கை வசதிகள் உள்ளன.

இந்த புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா, நேற்று மதியம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை முன்னிலை வகித்தார்.

எடப்பாடி பழனிசாமி

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கியத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்த ஒரு பெருமைக்குரிய மாவட்டமாகும். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, புதுக்கோட்டையில் ஒரு புதிய அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க, புதிய மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது நமது மாநிலத்தில் 22-வது அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த அரசின் உயர்ந்த குறிக்கோளாகும். மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது இந்த அரசின் கொள்கையாகும். கடந்த ஆறு ஆண்டு காலத்தில், எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் கூடுதலாக 1,000 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 403 முதுநிலை பட்ட மேற்படிப்புக்கான இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு

நாட்டிலேயே முதன்முதலாக, நமது மாநிலத்தில் சுகாதார துறைக்கென தனியாக மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 692 மருத்துவர்கள், 9 ஆயிரத்து 190 செவிலியர்கள் உள்பட 20 ஆயிரத்து 852 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது, மாநிலத்தின் உரிமையை மீறும் செயலாகும். கிராமப்புற மாணவர்களும், வறிய சமூக பொருளாதார அமைப்பிலிருந்து வரும் மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட முடியாது, மேலும் நகர்ப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு நகர்ப்புற மாணவர்களைப் போல் போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தாலும், பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை கிராமப்புற இளைஞர்கள் பெறமுடியாமல் இருப்பதாலும், அது அவர்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு அரசு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ததால் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்த பெருவாரியான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இதனால் பொது நுழைவுத்தேர்வை தொடர்ந்து தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்குமாறு கோரியுள்ளேன். மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் தற்போதுள்ள நியாயமான மற்றும் வெளிப்படையான மாணவர்கள் சேர்க்கை முறையை தொடரும் பொருட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டு சட்ட வரைவுகளுக்கும் விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி தமிழகஅரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் இதுதொடர்பாக பிரதமரையும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கூடுதல் மணல் குவாரிகள்

தமிழகத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கட்டுமான பணிகளுக்கு தடையின்றி எளிதாக மணல் கிடைக்கும் வகையில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்போது செயல்பட்டு வரும் 28 மணல் குவாரிகளில் இருந்து தினமும் சுமார் 5 ஆயிரம் லோடு மணல் பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் கூடுதல் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மணல் வினியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் குவாரிகளில் 2 யூனிட் மணல் ரூ,1050 என்ற விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. எனவே யாரேனும் அதிக விலை வைத்து பொதுமக்களுக்கு மணல் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த விழாவில் 3,533 பயனாளிகளுக்கு ரூ.11 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடக்கத்தில் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். முடிவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் நன்றி கூறினார்.

செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், உதயகுமார் உள்பட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொண்டனர். 

Next Story