சென்னை-கன்னியாகுமரி இடையே நீர்வழி போக்குவரத்து எண்ணூர் துறைமுக சரக்கு பெட்டக முனைய திறப்பு விழாவில் நிதின்கட்கரி தகவல்


சென்னை-கன்னியாகுமரி இடையே நீர்வழி போக்குவரத்து எண்ணூர் துறைமுக சரக்கு பெட்டக முனைய திறப்பு விழாவில் நிதின்கட்கரி தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:00 AM IST (Updated: 10 Jun 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.200 கோடியில் சென்னை-கன்னியாகுமரி இடையே நீர்வழி போக்குவரத்து தொடங்கப்படும் என்று எண்ணூர் துறைமுக சரக்கு பெட்டக முனைய திறப்பு விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்தார்.

சென்னை

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதானி குழுமம் சார்பில் ரூ.1,270 கோடியில் புதிய அதிநவீன சரக்கு பெட்டக முனையம் அமைக்க பணிகள் நடந்துவருகிறது. இதில், ரூ.724 கோடியில் சரக்கு பெட்டக முனைய கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரூ.151 கோடியில் சரக்கு முனையம், சரக்கு ரெயில் பாதை, மின்னணு அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவைகளின் திறப்பு விழா நேற்று எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நடந்தது. மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்கரி இவைகளை திறந்துவைத்து பேசியதாவது:-

நீர்வழி போக்குவரத்து

மத்திய அரசு நீர்வழி போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்தவகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கன்னியாகுமரி-சென்னைக்கு நீர்வழி போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநில அரசு பங்களிப்புடன் நிறைவேற்றப்படும். இதற்காக தமிழக அரசிடம் இருந்து திட்ட அறிக்கை கேட்டு இருக்கிறோம்.

திருவனந்தபுரம்-கன்னியாகுமரி-சென்னை, மும்பை-கோவா இடையிலும் நீர்வழி போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலங்களுக்குள் ஓடும் ஆற்றுவழி நீர்வழி தடத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

சேதுசமுத்திர திட்டம்

சேதுசமுத்திர திட்டம் எவ்வளவு செலவு ஆனாலும் செயல்படுத்தப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். ராமர் பாலம் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு 4 முதல் 5 மாற்று வழித்தடங்களை பரிசீலனை செய்துள்ளோம். தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதால் அது முடிந்த பிறகு மாற்று வழியில் திட்டம் செயல்படுத்தப்படும். சேதுசமுத்திர திட்டத்திற்கான கட்டுமானங்களை நாங்கள் அழிக்க மாட்டோம். பாக்ஜலசந்தி பகுதியில் கால்வாய் அமைத்தால் போதும் மேற்கு கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு இலங்கையை சுற்றாமல் நேரடியாக போய், வர முடியும்.

கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். குளச்சல் துறைமுக திட்டம் செயல்படுத்தப்படும்போது, மீனவர்கள் நலன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களும் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.1½ லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

எண்ணெய் கசிவு

கப்பல்கள் மோதியதில் எண்ணெய் கசிந்து பாதிப்புக்கு உள்ளான மீனவர்களுக்கு ரூ.203 கோடி இழப்பீட்டு பெற்றுத்தர கப்பல் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை 10 நாட்களுக்குள் தீர்த்துவைக்கப்பட்டு, தொகை பெற்றுத்தரப்படும்.

மீனவர்களுக்கு முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலில் அவர்கள் 11 நாட்டிக்கல் மைலை தாண்டி மீன்பிடிக்க வழிவகை செய்யப்படும்.

15 ஆண்டு வாகனங்கள்

15 ஆண்டுகள் வணிகரீதியாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை தடை செய்வது தொடர்பான திட்ட முன்வடிவு பிரதமர் அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்கத்திலிருந்து அகற்றி, மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் புதிய வாகனங்களை வழங்க ஏதுவாக, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்தவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த 3 ஆண்டில் 16,800 கிலோ மீட்டர் சாலை போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை-பெங்களூர், சென்னை-ஐதராபாத் சாலைகளை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நெடுஞ்சாலை பணிகள்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போது, ‘தமிழகத்தில் ரூ.40 கோடி அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி நடந்துவருகிறது. கடல் வழி பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.661 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது’ என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் மாநில அரசு நிறைவேற்றும். சில மாதங்களுக்கு முன்பு கடலில் கப்பல்கள் மோதிக்கொண்டதால் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே கப்பல் நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பென்ஜமின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய சரக்கு முனையத்தால் ஆண்டுக்கு 8 லட்சம் கன்டெய்னர்களை கையாள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story