மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணியின் போது வீட்டு வாசலில் சிமெண்டு ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு


மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணியின் போது வீட்டு வாசலில் சிமெண்டு ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 2:30 AM IST (Updated: 10 Jun 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணியின் போது வீட்டு வாசலில் சிமெண்டு ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபுரம்,

வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணியின் போது வீட்டு வாசலில் சிமெண்டு ரசாயன கலவை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியில் மயக்கம் அடைந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சுரங்க பாதை பணி

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இதில் பழைய வண்ணாரப்பேட்டை முதல் கொருக்குப்பேட்டை வரை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்க பாதை பணி நடைபெறுகிறது.

வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை சாலையில் கலீல் ரகுமான் என்பவருக்கு சொந்தமாக 8 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை அவர் வாடகைக்கு விட்டு உள்ளார். இந்த வீட்டு வாசலில் ஆழ்துளை கிணறு போடப்பட்டு அதை மூடாமல் வைத்து இருந்தனர்.

சிமெண்டு ரசாயன கலவை

நேற்று அதிகாலை 4.30 மணி அளவில், மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணியின் காரணமாக திடீரென அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து பீறிட்ட சிமெண்டு ரசாயன கலவை வீட்டு வாசல் வழியாக வெளியேறியது. அந்த ரசாயன சிமெண்டு கலவை மளமளவென சாலை முழுவதும் பரவியது.

கலீல்ரகுமான் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மும்தாஜ் என்ற பெண், சிமெண்டு கலவை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சியில் மயக்கம் அடைந்து விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

சாலையில் சிமெண்டு ரசாயன கலவை ஆறாக ஓடியதால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், வாகனங்களை தொடர்ந்து ஓட்டிச்செல்ல முடியாமல் பரிதவித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவர்கள், வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விட்டனர். இதுபற்றி மெட்ரோ ரெயில் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அங்கு வந்த மெட்ரோ ரெயில் அதிகாரிகள், சிமெண்டு ரசாயன கலவைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

3 மணி நேரம் அகற்றம்

காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் இந்த பணி நடைபெற்றது. 30 பேரல்களில் சிமெண்டு ரசாயன கலவைகளை முழுமையாக அகற்றினர்.

இதுபற்றி மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, “மூடப்படாமல் இருந்த பழைய ஆழ்துளை கிணற்றில் இருந்து சிமெண்டு ரசாயன கலவை வெளியேறியது. உடனடியாக அந்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டு விட்டது. வெளியேறிய சிமெண்டு ரசாயன கலவையும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. இனிமேல் சிமெண்டு ரசாயன கலவை வெளியேற வாய்ப்பு இல்லை” என்றனர்.

மெட்ரோ ரெயில் சுரங்க பாதை பணியின் காரணமாக ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் இதே பகுதியில் இருக்கும் ஷேக் மேஸ்திரி தெருவில் ஒரு வீட்டில் இருந்து இதே போல் 2 முறை சிமெண்டு ரசாயன கலவை வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது முறையாக இந்த சம்பவம் நடந்து உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story