சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்: அய்யாக்கண்ணு அறிவிப்பு


சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்: அய்யாக்கண்ணு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2017 3:02 PM IST (Updated: 10 Jun 2017 3:02 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியை அய்யாகண்ணு சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை,

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது பல்வேறு கட்சி தலைவர்கள் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கடைசியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி போராட்டத்தை வாபஸ் பெறக் கேட்டுக் கொண்டார். இதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும் மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்தும் அய்யாக்கண்ணு மீண்டும் விவசாயிகளை திரட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று போராட்டத்தை தொடங்கினார். 32 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும். இதில் மாவட்ட வாரியாக விவசாயிகள் கலந்து கொள்வார்கள், சென்னையில் 5 நாள் போராட்டத்துக்கு அனுமதி பெற்றுள்ளதாக அய்யாக்கண்ணு கூறினார்.

விவசாயிகள் அரை நிர்வாண உடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு போலீஸ் அதிகாரிகள் விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.அதன்படி இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்துப் பேசினார்கள். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார்.அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவரது பேட்டி வருமாறு:-

எங்கள் கோரிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினோம். அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார். அவர்கள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்கள். அதற்கு 2 மாதம் அவகாசம் கேட்டார்கள். எனவே தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம்.2 மாதத்தில் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட் டத்தில் ஈடுபடுவோம். அடுத்தடுத்து எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார். 


Next Story